குளித்தலை அருகே சேர்வைக்காரன் பட்டியில் வாகனத்தை வழிமறித்து அதில் வந்த பெண்கள் மற்றும் ஆண்களை தாக்கிய மது போதை இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும் கஞ்சா மற்றும் சந்து கடைகள் அதிகமாக செயல்படுவதை கண்டித்தும் காவல் நிலையத்தை ஊர் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் தனது வாகனத்தில் தைப்பொங்கல் பொங்கலை முன்னிட்டு அதே ஊரை சேர்ந்த நாகரத்தினம் மற்றும் அவரது உறவினர்களை வீரகவுண்டன்பட்டியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். வாகனத்தில் சேர்வைக்காரன்பட்டி வந்தபோது பேருந்து நிறுத்தம் அருகே மது போதையில் இருந்த இளைஞர்கள் வாகனத்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பெரியசாமி மற்றும் அவரது உறவினர்களான ஞானவேல், காமாட்சி விஜயலட்சுமி ஆகியோர் ஏன் வாகனத்தை வழி மறிக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.
அப்போது மது போதையில் இருந்த இளைஞர்கள் பெண்கள் என்றும் பாராமல் அவர்களை தாக்கியும், அவர்களை தடுக்க வந்த ஞானவேல் மற்றும் டிரைவர் பெரியசாமி ஆகியோரையும் தாக்கியுள்ளனர். சேர்வைக்காரன் பட்டியில் ரவி என்பவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி சந்து கடையில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் கஞ்சா புழக்கம் ஆகியவற்றினால் இளைஞர்கள் அடிக்கடி இப்பகுதியில் சாலைகளில் வருபவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பாலவிடுதி தகவல் தெரிவித்தும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினாலும், வழக்குப்பதிவு செய்யாத காரணத்தினாலும் சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் பால விடுதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இப்பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் சந்து கடைகள் மற்றும் கஞ்சா புழக்கத்தினை போலீசார் தடுக்க தவறியதாகும் எனவே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.