குளித்தலையை அடுத்த, தோகமலை யூனியன் குழுவில் திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதிமுகவை சேர்ந்த யூனியன் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தன்று யூனியன் குழு பெண் தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தோகைமலையூனியன் குழு 15 கவுன்சிலர்களை கொண்டது. இதில் அதிமுக 10, திமுக 4, பாஜக சார்பில் ஒரு கவுன்சிலர்கள் வெற்றி பெற்றிருந்தனர். அதிமுக யூனியன் குழு தலைவராக லதா, துணை தலைவராக பாப்பாத்தி ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2021 ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு துணை தலைவர் உட்பட 8 கவுன்சிலர்கள் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தனர். இதேபோல், திமுகவில் இருந்து ஒரு பெண்கவுன்சிலர் விலகி அதிமுகவில் இணைந்தார்.
இதையடுத்து, அதிமுகவில் தலைவர் உட்பட 3 கவுன்சிலர்கள் திமுகவில் 11 கவுன்சிலர்கள் இருந்தனர். இந்நிலையில், சாலை அமைத்தல், கட்டுமானம் ஆகிய ஒப்பந்த பணி, அலுவலக பணி மற்றும் யூனியன் வாகனங்களுக்கு டீசல் நிரப்புவதில், யூனியன் குழு தலைவர் லதாவின் கணவர் ராமசாமி தலையீடு இருந்ததாக கூறப்படுகிறது.
தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கடந்த பிப்ரவரி 3ம் தேதி, குளித்தலை ஆர்.டி.ஓ., புஷ்பா தேவியிடம் கோரிக்கை மனு அளித்தனர். திமுக கவுன்சிலர்கள் கொடுத்த கோரிக்கை மனுவை ஏற்று நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஆ.டி.ஓ. ,புஷ்பா தேவி தலைமை வகித்தனர். துணைதலைவர் பாப்பாத்தி, யூனியன் கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திமுக கவுன்சிலர்கள் 11 பேர். பா.ஜ.வை சேர்ந்த ஒரு பெண் கவுன்சிலர் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யூனியன் குழு தலைவர் உட்பட அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் கூட்டத்துக்கு வரவில்லை. இதையடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிமுக யூனியன் குழு தலைவர் லதா பதவி பறிக்கப்பட்டது.
அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ள நிலையில், சர்வதேச மகளிர் தின விழா அன்று, யூனியன் குழு பெண் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக. குளித்தலை ஸ்ரீதர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ. மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமர், குளித்தலை, தோகைமலை பகுதி திமுக பொறுப்பாளர்கள் பஞ். தலைவர்கள் யூனியன் கவுன்சிலர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.