கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் நிலப் பிரச்சனை விவகாரத்தில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்பி ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட மாற்றுக் கட்சியினர், பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Continues below advertisement

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 17-ஆம் தேதி வெண்ணைமலை கோவில் முன்பு அமர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் கோயில் நிலத்தில் உள்ள கண்ணம்மாள் என்பவரின் வீடு, 62 கடைகள், ஒரு செல்போன் டவர் ஆகியவற்றை  போலீஸ் பாதுகாப்புடன்  அகற்றிட திட்டமிட்டு இருந்தனர்.

Continues below advertisement

இன்று கண்ணம்மாள் என்பவர் வீட்டிற்கு சீல் வைக்க சென்ற இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அப்பகுதி மக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிட மறுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். போலீசார் பாதுகாப்பு பணிக்காக கரூர் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.