கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் பாலசுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் கடந்த மூன்று தினங்களாக அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவில் அருகில் அமைந்துள்ள 2 நிறுவனங்கள் மற்றும் 8 கடைகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற உள்ள நிலையில், அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால், பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். 


 




 


இதையடுத்து கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பாக பிரதிநிதிகளுடன் கோட்டாட்சியர் முகமது பைசல் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை உறுதியாக நடைபெறும் என பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட நிலையில், அதனையடுத்து கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து கடைகள் முன்பு குவிந்து கோஷமிட்டனர்.


 


 




அதைத் தொடர்ந்து இன்று நீதிமன்ற உத்தரவு கிணங்க எட்டு நிறுவனங்களுக்கு சீல் வைக்க முயற்சி மேற்கொண்டு இன்று வரை ஒரு நிறுவனத்தின் சார்பாக கடிதம் பெறப்பட்ட நிலையில் மீதமுள்ள ஏழு நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களுக்கு அறநிலைத்துறை சார்பாக சீல் வைக்க வந்த நிலையில் தற்போது மூன்று கடைகளுக்கு மட்டுமே கோவில் நிர்வாகத்தின் சார்பாக போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர். 


 


 




மேலும் வருகின்ற 23ஆம் தேதி நீதிமன்றத்தில் தற்போது வரை வெண்ணமலை அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி ஆலய திருக்கோவிலில் உள்ள கோவில் நிலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கை பற்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக கரூர் மாவட்ட அறநிலைத்துறை கூடுதல் பொறுப்பு உதவி ஆணையர் தெரிவித்தார்.


 


 




பொதுமக்கள் எதிர்ப்பை மீறி வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிகழ்வு வெண்ணமலை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சீல் வைக்கும் கடைகளுக்கு முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கயிறுகள் கட்டி போலீசார் உள்ளே நுழைய மறுத்த போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, மூதாட்டி ஒருவர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.