குளித்தலை அருகே பலத்த காற்று வீசியதால் சாலை ஓரத்தில் இருந்த மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் வந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அகற்றினர். இதனால் போக்குவரத்து சீரடைந்தது. கத்திரி வெயில் காலம் முடிந்ததும் தொடர்ந்து வெயிலின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்த நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை சுற்று வட்டார பகுதியில் பலத்த காற்று வீசியது. குடியிருப்பு பகுதியில் இருக்கும் தென்னை மரம், மாமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் பேயாட்டம் ஆடியது. வீட்டில் இருக்கும் ஜன்னல் கதவுகள் ஆட்டம் போட தொடங்கின. சாலைகளில் புழுதி பரவியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கிராமப்புறங்களில் வயல்வெளி பகுதியாக இருப்பதால் பலத்த காற்று வீசியதில் நடந்து சென்றவர்களை கூட காற்று அசைத்துப் பார்த்தது. குளித்தலை நகரம் பகுதியில் எள்ளரசு பாலம் அருகே மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து போக்குவரத்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர். கோடையில் வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.




 


மேலும், கரூர் அருகே லாலாபேட்டை பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் வாழை மரங்கள் முடிந்து விழுந்தது. சீரமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


 


 




கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், லாலாபேட்டை, பழைய ஜெயங்கொண்டம், மாயனூர் போன்ற பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த சூறாவளி காற்று சுமார் அரை மணி நேரம் வீசியது. மகாதானபுரம், லாலாபேட்டை, பிள்ள பாளையம்பாளையம், கருப்பத்தூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான வாழை, தென்னை மரங்கள் சரிந்தும், அடியோடு ஒடிந்தும் விழுந்தது. அதேபோல் இருபதுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் கீழே சாய்ந்தது. கிருஷ்ணராயபுரம் பகுதியில் சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் தென்னை மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் தடைப்பட்டது.  மின்கம்பங்களை சீரமைத்து மின்விநியோகம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.