கரூர் தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கீடு செய்த இடத்தில் இலங்கை அகதிகளுக்கு ஒதுக்கீடு செய்ததை தடை விதித்து பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட கோரிய வழக்கில், பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக புதிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம், சனப்பிரட்டி பகுதியை சேர்ந்த குமரேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் 40 பேருந்துகள் மட்டுமே நிறுத்துவதற்கான வசதி இருந்து வந்தது. இதனால் கரூர் மாவட்டத்தில் திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அங்கு சில பிரச்னையின் காரணமாக கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் புதிய அரசாணை வெளியிடப்பட்டது.
தோரணக்கல்பட்டியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தோரணக்கல்பட்டியில் பேருந்து நிலையம் கட்டுவதற்காக அரசாணை வெளியிடப்பட்ட இடத்தில் தற்போது இலங்கை அகதிகள் தங்குவதற்காக இடம் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான பணி தொடங்க உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, கரூர் தோரணக்கல்பட்டியில் இலங்கை அகதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தடை விதித்து பேருந்து நிலையம் அமைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சட்டமன்றத்தில் வெளிநாடு அகதிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் குடியிருப்புகள் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் "கரூர் மாவட்டத்தில் 225 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், வெளிநாடு அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் முகாம் ஒதுக்கீடு செய்வது சிறந்தது என கருத்து தெரிவித்து அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து கரூர் பேருந்து நிலையம் கட்டுவதற்கு 2 அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. குழப்பத்தை தவிர்க்க பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக புதிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்