குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதிகோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளது. மாநில அரசிடம் அனுமதி பெற்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய முடியும் என்ற அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.
டெல்லி சிபிஐ அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பி வி ரமணா முன்னாள் டி ஜி பி டி கே ராஜேந்திரன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ் உள்ளிட்ட குட்கா முறைகேடு வழக்கில் தொடர்புடையதாக கருதபடும் 12 நபர்கள் மீது புதிய வழக்குகள் பதிவு செய்ய அனுமதி கேட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு சிபிஐ எழுதிய கடிதத்தில், இந்த வழக்கு சமுதாயத்தில் சீர்கேட்டை விளைவிக்கும் வகையில் உள்ளதால், அதன் முக்கியத்துவத்தை கருதி தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, குட்கா வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சி.விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனிடம் சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், புதிய வழக்கு பதிவு செய்து, கிடைத்துள்ள புதிய ஆதாரங்களின் அடைப்படையில் இரண்டாவது குற்றப்பத்திரிகை பதிவு செய்ய சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
வழக்கு பின்னணி:
கடந்த 2016ஆம் ஆண்டு செங்குன்றம் அருகே அமைந்திருந்த குடோன் ஒன்றில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில் தமிழ்நாட்டில் குட்கா விற்பனைக்கு இருந்த தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ், எஸ்.பி விமலா, கலால்துறை , உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபி ஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக டிஜிபி ராஜேந்திரன் பதவியிலிருந்த போது அவரிடம் சிபிஐ வீட்டில் சென்று விசாரண நடத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்