கரூரில் வீடு கட்டுமான பணிக்காக மணல் கொட்ட வந்த கட்டிட தொழிலாளி நாகராஜ் டிப்பர் லாரி மீது ஏறியபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு ஜாமியா நகர் பகுதியில் புதிய வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. புதிய கட்டிடத்தில் மேஸ்திரி ஆக பணி புரியும் வெங்கமேடு, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி நாகராஜ் (52) என்பவர் கட்டுமான பணிக்காக டிப்பர் லாரியில் கொண்டுவரப்பட்ட எம்.சாண்ட் லோடு மணல் இறக்கும் பணியின் போது, சரி பார்ப்பதற்காக வாகனத்தின் மேலே ஏறிய போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின் கம்பியில் மோதி மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த கட்டிடத் தொழிலாளி நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.