கரூர் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 7500 மாணவ, மாணவிகளுக்கு தனியார் நிறுவன பங்களிப்புடன் பேரீச்சை சிரப் வழங்கும் பணியினை மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார்.


 




 


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 41 அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 7405 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு இரும்பு சத்துக் குறைபாடு வராமல் தடுப்பதற்காக திருச்சியில் செயல்படும் லயன் டேட்ஸ் தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் மூலமாக ஒரு மாணவருக்கு 390 ரூபாய் மதிப்பிலான தலா 1 கிலோ பேரீச்சை சிரப் பாட்டில், 7405 மாணவர்களுக்கு 14,84,000 ரூபாய் மதிப்பிலான பாட்டில்கள் பெறப்பட்டது. 


 





அந்த பாட்டில்கள் அனைத்தும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாதோன்றிமலையில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


 




 


இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், மாநகராட்சி அலுவலர்களும் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கி, அதன் பயன்கள் மற்றும் சாப்பிடும் விதத்தினை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.