கரூர் மாநகர் மற்றும் மாவட்ட எல்லைகளில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மேலும், அதிகபட்ச வாகன நெரிசலால் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்க இருந்த ஸ்கூட்டர் பெண்மணி மீட்கப்பட்டார். கரூர் மாநகரான திருக்காம்புலியூர் ரவுண்டானா, சுக்காலியூர் ரவுண்டானா மற்றும் மாவட்ட எல்லைகளுக்கு உட்பட்ட செம்மடை ரவுண்டானா, மணல்மேடு டெக்ஸ் பார்க் பைபாஸ், குளித்தலையை அடுத்த மருதூர் ஆகிய 5க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று மாலை நேரத்தில் திடீர் வாகன சோதனையில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்துக் காவல் துறையினர் ஈடுபட்டனர்.




தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலையான பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவங்களின் எதிரொலியாக திடீர் வாகனம் தணிக்கை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மாலை 5 மணிக்கு தொடங்கிய வாகனத் தணிக்கையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளை சல்லடை போட்டு ஆவணங்களை சோதனை இட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் 50-க்கும் மேற்பட்ட மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையிலான வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.




தற்காலிக சோதனைச் சாவடிகள் ஒவ்வொன்றிலும் 30 முதல் 40க்கும் மேற்பட்ட போலீசாரின் திடீர் சோதனையால் பரபரப்பான மாலை நேரத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 




குறிப்பாக அதிகபட்ச வாகன நெரிசலால் நிலை தடுமாறி பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்க இருந்த ஸ்கூட்டர் பெண்மணி ஒருவர் ஆயுதப்படை காவலர்களால் மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த திடீர் வாகன சோதனையால் கரூரில் பரபரப்பு நிலவியது.