Karur Stampede TVK Vijay: தவெக தலைவர் விஜய் தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசியதும் கூட்ட நெரிசலுக்கு காரணமானதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.
தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசிய விஜய்:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று, நாமக்கல்லை தொடர்ந்து கரூர் வந்து பாரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேச துவங்கியதும், கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்ததால் தனது பேச்சை சிறிது நேரம் நிறுத்தினார். இந்த சமயத்தில் அவரது பரப்புரை வாகனத்திற்கு அருகே நின்ற கூட்டத்தினர், தள்ளுமுள்ளு காரணமாக மயங்கி விழும் சூழலில் இருந்தனர். இதனை கண்டதும் தனது வாகனத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி தொண்டர்களை நோக்கி வீசினார்.
முண்டியடித்த தொண்டர்கள்:
இதனை கண்டதும் மேலும் சிலரும் தங்களுக்கு தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளனர். இதனை கண்டதும், வாகனத்தில் இருந்த ஆதவ் அர்ஜுனாவை அழைத்து மேலும் சில வாட்டர் பாட்டில்களை கேட்டு பெற்று, அதனை தொண்டர்களை நோக்கி விஜய் வீசியுள்ளார். இதனை தொண்டர்கள் பிடிக்க தவறியதால், கீழே விழுந்துள்ளது. தொடர்ந்து அந்த வாட்டர் பாட்டிலை எடுக்க தொண்டர்களிடையே தள்ளுமுள்ள ஏற்பட்டுள்ளது. அந்த நேரம் அங்கு மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு இருந்தால், இருட்டில் ஒருவர் மீது ஒருவர் விழுந்துள்ளனர். அந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட காரணமானதாக கூறப்படுகிறது.
வைரலாகும் வீடியோ:
இந்நிலையில் விஜய் தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசும் வீடியோவை இணையத்தில் பலரும் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். விஜயின் இந்த பொறுப்பற்ற செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என ஒரு தரப்பினரும், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தது எல்லாம் ஒரு குத்தமா என்று மற்றொரு தரப்பினரும் களமாடி வருகின்றனர். எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வினை, ஒரு தரப்பு தங்களது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதாகவும் நெட்டிசன்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.