கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி 100-க்கணக்கான திமுகவினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி,பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


 




 


அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் பூரண நலம் பெற வேண்டி கரூர் திமுக மத்திய மாநகர செயலாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான கனகராஜ் சார்பில் கரூர் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர் மத்திய நகர திமுக செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் திமுகவினர் பலர் பங்கேற்றனர்.


 




 


கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி சார்பில் கரூரில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகத்துடன் அக்கட்சியினர் வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாரியம்மன் ஆலயத்தில் திமுக ஓட்டுநர்கள் சார்பில் 108 தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தனர். சின்னதாராபுரம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாலசுப்ரமணி சார்பில் அன்னை காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் க.பரமத்தி ஒன்றிய செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி சார்பாக குருநாத சுவாமி கோவில், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் சார்பில் கடம்பர் கோவில், மாரியம்மன் கோவில், க.பரமத்தி மேற்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி சார்பில் எலவனூர் அன்னகாமாட்சி அம்மன் கோவில் என கரூர் மாவட்டம் முழுவதும் 100-க்கணக்கான கோவில்களில் திமுகவினர் சார்பாக சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


 




 


Join Us on Telegram: https://t.me/abpdesamofficial.