கரூரில் பெண் ஒருவர் தன் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது தனது வாகனத்திற்குள் பாம்பு இருந்ததால் அச்சமடைந்தார். தீயணைப்பு துறையினர் இருசக்கர வாகனத்தை பிரித்து முழுவதுமாக அகற்றிய பிறகு இரண்டு அடி சாரைப்பாம்பை பிடித்தனர்.




கரூர் மாவட்டம், பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்பவர் தனது குழந்தை மற்றும் பின்புறமாக அவரது தாயும் அமர வைத்து கரூர் வந்துள்ளார். கரூர் ரவுண்டானா அருகே வந்த போது இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் இருந்து திடீரென பாம்பு வெளியேறியதால் அச்சமடைந்து வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி ஓடிவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் தீயணைப்பு துறையினர் இருசக்கர வாகனத்தை ஒவ்வொன்றாக பிரித்து எடுத்த பிறகு அடியில் பாம்பு இருப்பதை கண்டனர். பின்ன, வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இரண்டு அடி நீள சாரை பாம்பை மீட்டனர்.




ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை பிடிக்க முயற்சித்த போது அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. (ஸ்கூட்டி) இருசக்கர வாகனத்தை முழுவதுமாக பிரித்து விட்டதால் வாகனத்தை ஓட்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் அந்த பெண், இருசக்கர வாகன பழுது நீக்குபவரை வரச் சொல்லி வாகனத்தை எடுத்துச் சென்றனர்.




அனைத்து பாகங்களும் அகற்றப்பட்டதால், வேறு ஒரு மெக்கானிக் வரவழைக்கப்பட்டு, பாகங்கள் பொருத்தப்பட்டு, பின்னர், அந்த பெண் தனது உறவினர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் காரணமாக கரூர் மனோகரா கார்னர் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.




மின்கம்பம் வீட்டின் மீது விழுந்தது - மின்சாரம் இல்லாததால் விபத்து தவிர்ப்பு


குளித்தலை அடுத்த ஆர்ச்சம்பட்டி பஞ்சாயத்து காலணி குடியிருப்பில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மின்கம்பங்கள் சேதம் அடைந்ததை தொடர்ந்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய மின்கம்பங்களை நட வேண்டும் என கிராம மக்கள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் மின்சார வாரியத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்த நிலையில் இரவு 7:00 மணி அளவில், ஒரு மின்கம்பம் முறிந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்தது.




சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மூன்று மின்கம்பங்கள் சாய்ந்து நின்றன. இதில் ஐந்து பேருக்கு மேல் லேசான காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் மின்சாரம் இல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் மீண்டும் புகார் அளித்ததை தொடர்ந்து, காவல்காரன்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் ஊழியர்கள் வந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். சேதமடைந்த மின்கம்பங்களால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத வகையில் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் சேதமடைந்த மின்கம்பங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.