கரூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்தும்போது ஆபாசமாக பாடம் நடத்தியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் மாவட்ட கல்வி அலுவலர் முறையான நடவடிக்கை எடுத்து ஆசிரியரை மீண்டும் பணியில் சேர்க்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.



கரூர் தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட பாகநத்தம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவியல் பாடத்தில் உள்ள படத்தினை இருபால் மாணவர்கள் பயிலும் வகுப்பறையில் ஆபாசமாக பாடம் நடத்தியதாக தலைமை ஆசிரியை தனலட்சுமி பள்ளி மாணவன் நாகேந்திரன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட கல்வி அலுவலருக்கு பரிந்துரைத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் பன்னீர்செல்வத்தை மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்  நடவடிக்கை மேற்கொண்டார். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட பாரபட்ச நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்து நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர்.




கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்


இதனைத் தொடர்ந்து இன்று கரூர் அடுத்த தாந்தோணி பகுதியில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சங்க அலுவலகத்தில் அவசர மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றக்கூடிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்களும், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.




நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் பெரியசாமி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர் பன்னீர்செல்வம் அந்த பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக பாடம் நடத்தி வருவதாகவும் அவர்மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாத சூழலில் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை மாணவர்களுக்கு போதித்ததை திரித்து பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி மாணவன் நாகேந்திரனை மிரட்டி கடிதம் பெற்று ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக இந்த செயலில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே, மாவட்ட கல்வி அலுவலர் விஜயராகவன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட பன்னீர்செல்வம் ஆசிரியரை அதே பள்ளியில் பணி அமர்த்த வேண்டும். அதுவும் உடனடியாக நாளை திங்கள் கிழமை பள்ளியில் அவர் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும், அவர் மீதான குற்றச்சாட்டை திரும்ப பெற வேண்டும். இந்த நடவடிக்கைகளை மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க தவறினால் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தும் சூழல் ஏற்படும் என எச்சரித்தார்.