அடுத்து வருகிற பொது முடக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஒமிக்ரான் குறித்து விவாதித்து எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களிலும் 10,955 பேருக்கு 29.61 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப் பட்டா, முதியோர், விதவை, மாற்றுத் திறனாளி ஓய்வூதியம், வங்கிக் கடனுதவி, மரக்கன்றுகள் உள்பட 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மழைக்காலத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த 11 பேரில் 5 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் வழங்கிவிடுவோம். மழையின் போது உயிரிழந்த 470 கால்நடைகளில் 388 கால்நடைகளுக்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. சேதமடைந்த 2,649 குடிசை வீடுகளில் 2,154 வீடுகளுக்கும், 734 ஓட்டு வீடுகளில் 623 வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாவட்டத்தில் ஏற்கெனவே நடைபெற்று வருகிற திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ரூ. 154.29 கோடியில் குடிநீர் வசதித் திட்டங்கள், ரூ.99.99 கோடியில் சாலை வசதி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பழைய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணி முடிவடைந்த நிலையில் உள்ளது. இது மிக விரைவில் திறக்கப்படும்.




இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,621 மையங்கள் தேவைப்படுகின்றன. இதில், 1,821 மையங்கள் திறக்கப்பட்டு, செயல்படுகிறது. மாவட்டம் முழுவதும் விரைவில் அமைக்கப்பட்டுவிடும். இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் 12 மாவட்டங்களிலும் டிசம்பர் மாதத்துக்குள் அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் ஜனவரி மாதத்தில் இருந்து முழுமையாக செயல்படுத்தப்படும். ஒமிக்ரான் தொடர்பாக பொது சுகாதாரத் துறையிலிருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வரவில்லை. பொதுவாக பொது முடக்கத் தளர்வை அமல்படுத்தும்போது மருத்துவ ஆலோசனைக் குழுவைத் தமிழக முதல்வர் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது வழக்கம். அடுத்து வருகிற பொது முடக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஒமிக்ரான் குறித்து விவாதிக்கப்படும். இதில், எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். மனுக்கள் வாங்கும் இயக்கத்தை கட்சி நிகழ்ச்சியாக அல்லாமல் அரசு நிகழ்ச்சி போல ஒவ்வொரு ஒன்றியமாகச் சென்று மக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கும் திட்டம் உள்ளது என்றார். அவருடன் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.