கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஓந்தாம்பட்டியிலுள்ள தனியார் விவசாய விளை நிலத்தில் இன்று வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடவு செய்யும் தொடக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.
இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், தமிழக அரசால் "பசுமை தமிழ்நாடு" திட்டத்தின் கீழ், 2022-2023 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் 1.77 கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, நடவு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் 5,77,500 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவு பணி தொடங்கவுள்ளது. இதில் விவசாய நிலங்களில் மட்டும் நடுவதற்கு 3,15,000 மரக்கன்றுகள் வனத்துறையினரால் நர்சரிகளில் நடவு செய்யப்பட்டு, மரக்கன்றுகள் தயாராக உள்ளது. விலை இல்லாமல் நீங்கள் மரக்கன்றுகளை வாங்கிக் கொள்ளலாம். வனத்துறையினர் நீங்கள் மரங்களை நடுவதற்கு உரிய உதவி செய்து கொடுப்பார்கள்.
இந்த வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் விவசாய நிலங்களில் தேக்கு, வேம்பு, செம்மரம், மகாகனி, பெருமரம், சவுக்கு போன்ற விலை உயர்ந்த மரக்கன்றுகளை நடவு செய்திட முன்வர வேண்டும். இன்றைய தினம் அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள ஓந்தாம்பட்டி கிராமத்தில் உள்ள சிவகுமார் அவர்களின் விளை நிலத்தில் மரக்கன்றுகள் நடக்கூடிய விழாவை தொடங்கி வைத்திருக்கிறோம். தொடர்ந்து விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களில் தேவைப்படும் மரக்கன்றுகளை வனத்துறையிலும், அருகில் உள்ள வன அலுவலகங்களிலும் பெற்று உங்களுடைய விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டு, நீங்கள் உங்கள் நிலத்தையும், இந்த நாட்டினுடைய வளத்தையும் பெருக்க வேண்டும். மேலும், வனத்தினுடைய பரப்பை அதிகரிக்க வேண்டும்.
மரக்கன்றுகள் இன்றைய தேதியில் ஒரு டன்னுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பு வரக்கூடிய 20 ஆண்டுகளில் அது முழுமையான வளர்ச்சி பெற்று இருக்கும். மிகுந்த விலை உயர்ந்த பலன் தரக்கூடிய மரக்கன்றுகளை நடுவதற்கு வனத்துறை தகுந்த ஆலோசனை பெற்று அவர்கள் கூறும் அறிவுரையின்படி மரக்கன்றுகளை நடவு செய்து, பயன்பெற வேண்டும். மேலும், மரக்கன்றுகளை பராமரிக்க தேவையான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். இதனை பொதுமக்களும், விவசாய மக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சரவணன், வனசரக அலுவலர்கள் செல்வகுமார், முரளிதரன், சசிஹரிபிரியா, அறிவழகன், தண்டபாணி, சிவா, கனகராஜ், தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், வட்டாட்சியர் சிவக்குமார், ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்மணி, உறுப்பினர் ரவீந்திரன், நில உரிமையாளர்கள் ராஜேஸ்வரி சிவக்குமார், கீதாவடிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.