கரூரில் அனுமதி பெறாத கல் குவாரிக்கு எதிராக போராடி கொலை செய்யப்பட்ட விவசாயி ஜெகநாதன் உடலை நான்கு நாட்கள் கழித்து உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்து உடல் தகனம் செய்தனர். ஜெகநாதனின் மனைவி ரேவதி கட்சிக்காக பாடுபட்ட என் கணவனை பார்ப்பதற்கு இதுவரையிலும் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி வரவில்லை என்றும் கூறினார். கரூர் மாவட்டம் தென்னிலை அருகே  தனியார் ப்ளூ மெட்டல்ஸ் மற்றும் கல்குவாரி செல்வகுமார்(45) நடத்தி வந்தார். இந்நிலையில் கல்குவாரி செயல்படும் கால முடிந்தும் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கனிமவளத்துறையினரிடம் புகார் கொடுத்தன் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கனிமவளத்துறை அந்த கல்குவாரியை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் காருடையாபாளையம் அருகே விவசாயி ஜெகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த கல்குவாரியின் பொலிரோ வேன் ஜெகநாதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.





முன்னதாகவே 2019 ஆம் ஆண்டு ஜெகநாதன் மற்றும் செல்வகுமார் இடையே முன்விரோதம் இருந்ததாகவும் அப்போது ஜெகநாதனை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், வேன் ஓட்டுநர் சக்திவேல், கூலிப்படை கும்பலை சேர்ந்த சக்திவேல் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரது மனைவி ரேவதி குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் மட்டும் உடலை வாங்குவதாக கூறினார். அப்போது மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஜெகநாதன் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் நிதியிலிருந்து இறந்தவர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியும் ஜெகநாதனின் இரு மகன்களின் படிப்பு செலவை மாவட்ட ஆட்சியரை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.





ஆனால் ஒரு கோடி ரூபாய் மற்றும் அரசு வேலை வழங்கினால் மட்டும் உடலை வாங்குவதாக ஜெகநாதனின் மனைவி கூறியிருந்த நிலையில், சமூக ஆர்வலர் முகிலன் மற்றும் சண்முகம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து, விவசாயி ஜெகநாதன் மனைவி ரேவதி மற்றும் மகன்கள் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெகநாதன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய  கோரிக்கை வைத்து வழங்கிய மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மறுபிரேத பரிசோதனை செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கூறி ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் உள்ளிட்ட மூன்று நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதால் ஜெகநாதன் உடலை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் நிராகரித்ததால் ஜெகநாதனின் மனைவி ரேவதி பிரேதத்தை பெற்றுக் கொள்வதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.




அதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவரையில் வைக்கப்பட்டிருந்த ஜெகநாதன் உடலை பெற்றுக் கொள்வதற்காக அவரது மனைவி ரேவதி உறவினர்கள் வந்தனர். அப்போது காவல்துறையினர் உடலை சீக்கிரம் எடுத்துச் செல்லுங்கள் என்று ரேவதியிடம் கூறினர். அதற்கு ரேவதி உறவினர் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறினார். அப்போது ரேவதி இறுதிச்சடங்கு செய்வதற்கு கூட அனுமதி அளிக்காமல் காவல்துறையினர் தரப்பில் நெருக்கடி கொடுத்ததாக நெஞ்சை அடித்துக் கொண்டும், போலீசார் காலில் விழுந்தும் தனது கணவன் ஜெகநாதன் இறுதி சடங்கு செய்வதற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று கெஞ்சிய காட்சி கண்ணீர் மல்க வைத்தது.


அப்போது ஜெகநாதனின் மனைவி தற்பொழுது அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கு என் கணவர் அப்படி பாடுபட்டார், செந்தில் பாலாஜி வரும் பொழுது டெம்போ வைத்தும் பொதுமக்களை அழைத்து வருவதும், ஆரத்தி எடுப்பதும் இருந்து வந்த நிலையிலும், இதுவரை என் கணவரையும் மற்றும் என் குழந்தைகளையும் பார்ப்பதற்கு கூட  வரவில்லை என்று கண்ணீருடன் கதறி அழுதார். பின்னர் நான்கு நாட்களுக்குப் பிறகு ஜெகநாதன் உடலை கண்டு அவரது மனைவி ரேவதி, அவரது தாய், மகன்கள் இறுதிச் சடங்கு செய்வதற்காக அங்கிருந்து எடுத்துச் சென்றனர். பின்னர் உடல்தகனம் செய்யப்பட்டது.