கரூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 8,92 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி. 01.01.2023ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 2023ஐ மேற்கொள்வது தொடர்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் காலை 10 மணியளவில் வெளியிட்டார்.
வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 243, வாக்குச் சாவடி அமைவிடங்களின் எண்ணிக்கை 160. இந்த தொகுதிகளில் 1,047 வாக்குச்சாவடி மையங்களும், 621 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உள்ளன. நவம்பர் 9ம்தேதி முதல் டிசம்பர் 8 ம்தேதி வரை பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், இடமாற்றம் மனுக்கள் அளிக்கலாம். நவம்பர் 12, 13, 26 மற்றும் 27ம் தேதிகளில் மனுக்கள் பெற சிறப்பு முகாம் நடைபெறுகிறது. டிசம்பர் 26 ம்தேதிக்குள் வாக்காளர் பதிவு அலுவலரால், மனுக்கள் மீதான நடவடிக்கை முடிவு செய்யப்படும். 2023ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்களும் புதிதாக உருவாக்கப்பட்ட 2 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமனம் செய்ய வேண்டும். மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் தொடர்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை முகவர்களும் ஒரு நாளைக்கு தலா 10 வீதம் அதிகபட்சமாக 30 படிவங்கள் வரை சமர்ப்பிக்கலாம். அனைத்து கோரிக்கை மனுக்களிலும் வாக்காளர் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்ககோரும் மனுதாரர் 21 வயதுக்கு மேற்பட்டவராகவும், அவர் முன்பு சாதாரணமாக வகித்து வந்த முகவரி கட்டாயம் படிவம் 6 ல் குறிப்பிட வேண்டும். மேலும், ஏற்கனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு தற்போது முகவரி மாற்றம் கேட்கும், வாக்காளர்கள் அவர் முன்பு வசித்து வந்த முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்களை கட்டாயம் படிவம் 8ல் சமர்ப்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் இடமாற்றம் செய்தல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக வரிசை எண்கள் கொண்டுள்ள புதிய படிவங்களை (படிவம் 6, 6ஏ, 6பி, 7, மற்றும் 8) பயன்படுத்திட வேண்டும். மனுதாரரின் மனுவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள வசதியாக மனுவில் (படிவம் 6, 6ஏ, 6பி, -7 மற்றும் 8) மனுதாரரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அவசியம் குறிப்பிட வேண்டும்.
நவம்பர் 9ம்தேதி முதல் டிசம்பர் 12ம்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோர்களிடம் மனுக்களை அளிக்கலாம்.
நவம்பர் 9ம்தேதி முதல் டிசம்பர் 12 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17 வயது முடிவுற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி நியமன அலுவலரிடம் மனுக்களை அளிக்கலாம். அந்த முகாமில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக படிவம் 6பி பெற்று தங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எணணை இணைத்துக் கொள்ளலாம். மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் 66.25 சதவீதம் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://www.nvsp.in. https://voterportal.eci.gov.in என்ற இணையதளங்கள் மற்றும் வோட்டர் ஹெல்ப்லைன் என்ற மொபைல் செயலி மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம்.