கரூரில் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கிய எம்.பி ஜோதிமணி குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து பாரதியார் பாடல்களை சொல்லிக் கொடுத்தார்.


 




கரூர் மாவட்டம், வெள்ளியணையில்  ராகவேந்திரா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுவர், சிறுமியர் உள்ளனர். இந்த காப்பகத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கினார். அப்போது ஜோதிமணி குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து "அச்சமில்லை அச்சமில்லை" என்ற பாரதியார் பாடலை சொல்லிக் கொடுத்து பாடச் சொன்னார். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி சிறிது நேரம் கலந்துரையாடினார். மேலும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட  குழந்தைகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். அப்போது எம்.பி ஜோதிமணி தனது அருகில் அமர்ந்திருந்த சிறுமி ஒருவருக்கு சாப்பாடு ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.


 


 




கரூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு ஜோதிமணி தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் எம்.பி ஜோதிமணி கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில்  கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய, ஜோதிமணி - கடந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பாக களப்பணியாற்றி நமக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இந்த தேர்தலில் அவர் பங்கேற்க முடியவில்லை என்றாலும், கரூர் திமுகவை சிறப்பாக கட்டமைத்து, அவர் ஏற்படுத்திய படை என்று சொல்லும் அளவிற்கு கரூர் திமுகவினர் முன்னின்று சிறப்பாக செயல்பட்டு இரண்டாவது முறையாக நமக்கு வெற்றியை தேடி தந்துள்ளனர். அதற்காக செந்தில் பாலாஜிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல முடியாத சூழல் இருந்தாலும், அவருக்கு நன்றி தெரிவித்தார்.


 




நீட் தேர்வு விவகாரம் தற்போது அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் தற்போது எதிர்க்க துவங்கியுள்ளனர். தமிழக முதல்வர் நீட் விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டு எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார். அது தொடர்பான தகவல்களை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு மற்ற மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார். மத்திய மோடி ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கரூர் நாடாளுமன்ற தொகுதியும் புறக்கணிக்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கரூரை சேர்க்காமல் புறக்கணித்துள்ளனர். இதே போன்று மதுரையிலிருந்து, பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயிலையும் கரூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்றார். ஆளும் கட்சிக்கு இணையாக எதிர்க்கட்சியிலும் எம்.பி-க்கள் இருக்கின்றனர். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அவை எதிரொலிக்கும் என்றார்.