கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா காதப்பாறை கிராமம் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள 23 ஆக்கிரமிப்பாளர்களை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் இடத்தில் இருந்து, இந்து சமய அறநிலைத்துறை சட்டப்பிரிவு 78 மற்றும் 79 படி வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையரின் கோர்ட் உத்தரவுகளில் கூறியுள்ள படி ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி தனலட்சுமி, துரைசாமி, செல்லப்பன், செல்லம்மாள், மாரிமுத்து, சதாசிவம், சுப்பிரமணியன், கிருஷ்ணன் உட்பட 23 பேருக்கு இந்து சமய அறநிலைத்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.





23 ஆக்கிரமிப்பாளர்களும் தங்கள் வசம் ஆக்கிரமிப்பில் வைத்துள்ள சொத்துக்களை உடனே கோயில் நிர்வாகத்துடன் ஒப்படைக்க வேண்டும். தவறினால் காவல்துறை மற்றும் இதர துறைகள் உதவியுடன் இந்த இடங்களை சுவாதீனம் எடுக்கப்பட்டு, கோயில் செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் 23 இடத்தின் உரிமையாளர்களுக்கும் கடந்த ஜூலை மாதம் அனுப்பப்பட்டது. இந்த இடம் எங்களுக்கு முறைப்படி சொந்தமான இடம். எனவே இந்த நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என்று அப்பாவி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் போலீசார் உதவியுடன் மேற்கண்ட 23 வீடுகளை கையகப்படுத்திட  வெண்ணைமலை பகுதிக்கு அதிகாரிகள் காலை வந்தனர். தயார் நிலையில் புல்டௌசர்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மின்வாரிய ஊழியர்கள் சிலரும் மின்னிணைப்பு துண்டிக்க தயார் நிலையில் காத்திருந்தனர். பகுதியில் வசிக்கும் மக்கள், கடைக்காரர்கள் என்று 400க்கும் மேற்பட்டவர்கள் வெண்ணைமலைக்கோயில் அருகில் கட்டப்பட்டு வரும் மண்டபம் அருகில் அறநிலையத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைப்பாளர், முன்னாள் விஏஓ காமராஜ் தலைமையில் கூடினர்.




தொடர்ந்து அங்கு வந்த கரூர் ஆர்டிஓ ரூபினா, டிஎஸ்பி தேவராஜ், மண்மங்கலம் தாசில்தார் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கலெக்டரை சந்திக்க சென்றுள்ளனர். உங்கள் கோரிக்கைகளை தெரிவித்தால் நாங்கள் கலெக்டர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கிறோம் என்றனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள், நோட்டீஸ் பெற்றவர்கள், பெறாதவர்கள் என்று அனைவரும் தங்கள் கருத்துக்களை அதிகாரியிடம் கூறினார். பல தலைமுறையாக இந்த இடத்தில் வாழ்ந்து வருகிறோம். நிலத்தை முறைப்படி பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் அரசுக்கு உரிய கட்டணத்தை கட்டித்தான் இந்த நிலத்தை வாங்கினோம். பல்வேறு வங்கிகளில் முறையாக விண்ணப்பித்து கடன் பெற்றும், உள்ளாட்சி அமைப்புகள் விண்ணப்பித்து கட்டிடம் கட்ட அனுமதி பெற்றும், மின்வாரியத்தில் விண்ணப்பித்து மின் இணைப்பு பெற்றும் சட்டப்படி வீடு கட்டி வசித்து வருகின்றோம்.




இந்நிலையில், இடம்  திடீரென்று கோயிலுக்கு சொந்தமானது, காலி செய்யுங்கள் என்று கூறினால், நாங்கள் என்ன செய்வது. நாங்கள் இந்த இடம் வாங்க செலுத்திய தொகை, கட்டிடம் கட்டிய தொகை போன்றவற்றிற்கு யார் பொறுப்பு. இந்த இழப்புகளை எப்படி ஈடு செய்ய முடியும். அரசால் அங்கீகரிக்கப்பட்டு வீடு கட்டி வசித்து வரும் நிலையில், அந்த அரசாங்கமே இந்த இடம் உங்களுடையது அல்ல. அறநிலைத்துறைக்கு சொந்தம் என்று கூறுவது எவ்வகையில் நியாயம் என்றனர். மக்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட அதிகாரிகள், இன்று ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற எந்த செயல்பாடும் இருக்காது என்று உறுதியளித்தனர். பின்னர் மக்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் வெண்ணைமலைப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.