அமராவதி ஆற்றுப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில், வட தமிழகத்தின் மேல் பகுதிகளில், நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப் பகுதிகளான அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், க.பரமத்தி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 




இதனால், கரூர் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தண்ணீர் வரத்து, வினாடிக்கு 243 கனஅடியாக இருந்தது. 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 865 கன அடியாக அதிகரித்தது. மாவட்டத்தில், 8:00 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.,): கரூர், 2.4, அரவக்குறிச்சி, 7, கிருஷ்ணராயபுரம், 1, பஞ்சபட்டி, 37, பாலவிடுதி, 9.4, மைலம்பட்டி, 14 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 6.40 மி.மீ., மழை பதிவானது.


காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு,  16 ஆயிரத்து, 670 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 22 ஆயிரத்து, 269 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 21 ஆயிரத்து, 449 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 820 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.




திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 506 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 525 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், 125 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 77.73 அடியாக இருந்தது.




திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 32.81 கனஅடியாக இருந்தது.





கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு, 42 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 18.36 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், வினாடிக்கு 42 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.