மகனுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தகுந்த முன்னுரிமையும், வழங்க வேண்டும் என்பதற்காகவும் இட ஒதுக்கீட்டில் பயன் பெறவும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கக் கூடிய உரிமையை பெற முக்கிய ஆவணமாக சாதிச் சான்றிதழ் உள்ளது.
அதேநேரத்தில் இந்திய அளவில் ஒரு மாதிரியான இட ஒதுக்கீடும் மாநில அளவில் அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் தமிழகத்திலும் பழங்குடி மக்களாக, அனைத்து மாவட்டங்களிலும் நரிக்குறவர் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்காக அரசு வழங்கும் இட ஒதுக்கீட்டினை முழுமையாக இவர்கள் அனுபவிக்க முடியாமல் போகும் சூழல் இன்று வரை உள்ளது. மலைவாழ் மக்களும் பலமுறை அரசு அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பித்தாலும் சாதிச் சான்றிதழ் இன்று வரை பலருக்கு எட்டாக் கனியாகத்தான் உள்ளது. சாதிச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த பழங்குடி சேர்ந்தவர், சான்றிதழ் கிடைக்காததால் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் வேல் முருகன்(49). பழங்குடி சமூகத்தினைச் சேர்ந்தவரான இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். தனது மகனின் உயர் கல்விக்காக சாதிச் சான்றிதழ் வேண்டி பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான வேல்முருகன் நேற்று மதியம் சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு வாசலிலின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீயை பற்றவைத்துக் கொண்டு நீதிமன்றத்திற்குள் நடந்து சென்றார். மேலும், கையில் அவர் வைத்திருந்த பெட்ரோலை மீண்டும் தன் மீது ஊற்றிக் கொண்டே இருந்தார். இதனால் யாரும் அவரிடம் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் மீது இருந்த தீயை காவல் துறையினர் அணைத்தனர். அதன் பின்னர் வேல்முருகன், “நான் மலைகுறவன் சமூகத்தைச் சார்ந்தவன். எனது மகனுக்கு சாதிச் சான்றிதழ் வேண்டி பலமுறை விண்ணப்பித்தும் அரசு அலுவகத்திற்கு பலமுறை அலைந்து பார்த்து விட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. எனவே இந்த முடிவினை எடுத்தேன். இனியாவது உடனடியாக சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என நம்புகிறேன்” என சத்தமாக கத்தியுள்ளார்.
தீக்காயங்களுடன் இருந்த வேல்முருகனை காவல் துறையினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் தீக்குளித்த சம்பவமே பெரும் பரப்பை ஏற்படுத்திய நிலையில், வேல்முருகனின் இறப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடி மக்கள் சாதிச் சான்றிதழ் வேண்டி பலமுறை விண்ணப்பித்தாலும் பல்வேறு அரசு அலுவலகர்கள் சான்றிதழ் வழங்குவதில் பெரும் அலட்சியப் போக்கினையே கடைபிடிக்கின்றனர். சான்றிதழுக்காக உயிரிழப்பு எனும் அவலநிலை என்றைக்கு மாறுமே என்பதற்கு அரசுத்தரப்புதான் பதில் சொல்லவேண்டும்.