இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி சிந்தலவாடி ஊராட்சி பொதுமக்கள் மனு.


குளித்தலை ஆர்டிஓ அலுவலகத்தில்  இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி சிந்தலவாடி ஊராட்சி பொதுமக்கள், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வருவாய் கோட்டாட்சியரிடம்  மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.




கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது சுமார் 195 பேருக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டு மனை  பட்டா இடத்தினை அளந்து பட்டா தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.




 


 பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாதால் சிந்தலவாடி ஊராட்சிக்குட்பட்ட அந்தரப்பட்டி, மகிளிப்பட்டி, சிந்தலவாடி, கீழ சிந்தலவாடி, மத்தி பட்டி பாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் இயக்கம்  என்ற பெயரில் இன்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட 195 பயனாளிகளுக்கு பட்டாவினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் சிந்தலவாடி ஊராட்சியில் வீட்டுமனை இல்லாத பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும் கண்டன கோஷங்களையும் முழக்கமிட்டனர்




அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற சிந்தலவாடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 195 பேருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இடத்தினை அளந்து பட்டா வழங்க கோரியும், 130 பேர் தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கக் கோரி புதிய கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முரளிதரனிடம் அளித்தனர்.




விரைவில் குடிநீர் வினியோகம் சீராகும்.


கரூர் மாவட்டம் கட்டளையில் காவிரி குடிநீர் நீரூற்றும் நிலையத்தில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டதால் கரூர் மாநகராட்சி பகுதிகளில் விரைவில் குடிநீர் விநியோகம் சீராகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரூர் மாநகராட்சியில் புதிதாக விரிவாக்கப்பட்ட பகுதிகளான தான்தோன்றி மலை, சனபரட்டி பகுதிகளை சேர்த்து 48 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 290.74 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இதில் காவிரி ஆற்றில் வாங்கல், கட்டளை ஆகிய பகுதிகளில் நீர் ஊற்று நிலையத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. 


 இந்த நிலையில், கட்டளை நீரூற்று நிலையத்தில் சமீபத்தில் வெள்ளம் சூழ்ந்து குடிநீர் குழாய் அடித்து செல்லப்பட்டது. இதனால் தான்தோன்றி மலை ஜனபிரட்டி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது நீரூற்று நிலையத்தில் சீரமைப்பு பணி நிறைவடைந்துள்ளது. இது குறித்து கரூர் மாநகராட்சி பொறியாளர் நக்கீரனிடம் கேட்டபோது, கட்டளை நீரூற்று நிலையத்தில் இரண்டு மின் மோட்டார்களும் சரி செய்யப்பட்டு விட்டதால் விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்கும்” என்றார்.