பள்ளபட்டியில் கனமழை காரணமாக பள்ளி முடிந்து வீடு திரும்பிய பொழுது கழிவுநீர் வடிகாலில் தவறி விழுந்த சிறுவன் ஆற்றில் சடலமாக மீட்பு.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையின் காரணமாக சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது இந்த நிலையில் பள்ளி முடிந்து வீடு செல்லும் ஏராளமான மாணவ மாணவிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் பள்ளப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளப்பட்டி பெய்த கனமழையின் காரணமாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வரும் முகமது உஸ்மான் (12 வயது) சிறுவன் மிதிவண்டியில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது அரசு மருத்துவமனை அருகே எதிர்பாராத விதமாக சிறுவன் கழிவு நீர் வடிகாலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் நங்காஞ்சி ஆற்றுப்பகுதியில் சிறுவன் முகமது உஸ்மானை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிறுவன் கழிவுநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.