கரூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் பிரேதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் மாவட்டம்,  ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட, புதூர் பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது 12) 7ஆம் வகுப்பு, மாரிமுத்து (வயது 13) 6ஆம் வகுப்பு, விஷ்ணு (வயது 13) 8ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவர்கள் நேற்று மாலை அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இரவு வரை வீட்டிற்கு வராததால் மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களை தேடி அழைந்துள்ளனர். 


அப்போது கிணற்றில் குளிக்க சென்ற மாணவர்களை காணவில்லை என்று தெரிந்து கொண்டு கிணற்றில் பார்த்துள்ளனர். கிணற்றில் மாணவர்களின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, வந்து தேடி பார்த்தபோது மூன்று மாணவர்களும்  இறந்த நிலையில் பிரேதத்தை மீட்டு கரூர் நகர காவல் துறையினர் உதவியுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து கரூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்களான சிறுவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோடை விடுமுறை என்பதால் சிறுவர்கள் பொழுதை கழிப்பதற்காக கடல், ஆறு, ஏரி, குட்டை, கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். அவ்வாறு செய்வதால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். அரசும், அந்தந்த மாவட்ட நிர்வாகமும் இதுபோன்ற நிகழ்வுகளை நடைபெறாமல் இருக்க தொடர்ந்து எச்சரிக்கையுடன் கூடிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.