பல ஆண்டுகளாக பதிவு செய்து ஏக்கத்தோடு காத்திருந்த விவசாயிகளுக்கு, 2 லட்சம் மின் இணைப்புகளை வழங்கி தமிழக முதல்வர் மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என கரூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.


 




கரூர், தான்தோன்றிமலையில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற்றன. இதில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.


 


 




இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டார். பின்னர் முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


 




அமைச்சர் செந்தில் பாலாஜி மேடையில் பேசுகையில், பல ஆண்டுகளாக பதிவு செய்து காத்திருந்த விவசாயிகள் தங்களுக்கு வாழ்நாளில் இலவச மின் இணைப்பு கிடைக்காதா என்று ஏக்கத்தோடு இருந்த விவசாயிகளுக்கு, இரண்டு லட்சம் மின் இணைப்புகளை முதலமைச்சர் வழங்கி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கரூரில் ஒரு ஐ.டி பார்க் வேண்டும் என்ற அந்த கனவை முதலமைச்சர், துணை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்ற உடனே, கரூர் மாவட்டத்திற்கு அந்த ஒரு சிறப்பு திட்டத்தை வழங்கியுள்ளார். கரூர் மாவட்ட மக்களின் சார்பாக கோடான கோடி நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.


 




தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் சுமதி , தான்தோன்றி மலை அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகளும் ஆசிரியர் பெருமக்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 


 




தனியார் வேலை வாய்ப்பு முகாமில் ஆர்வத்துடன் முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது வேலைக்கான படிவத்தை பெற்று சென்றனர்.