கரூரில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்த ஆய்வின்போது ஓட்டுனர் வருகை இல்லாத, முதலுதவி பெட்டியை சரியாக பயன்பாட்டில் வைக்காத பேருந்துகளுக்கு அனுமதி தரக்கூடாது என எஸ்.பி பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.


 


 




 


கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க உள்ளதால் தமிழக அரசு தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 92 தனியார் பள்ளிகளில் இயங்கி வரும் 702 பேருந்துகளில் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ள 556 பேருந்துகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்யப்பட்டன. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தர்மானந்தம் ஆகியோர் பள்ளிப் பேருந்துகளை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர். 


 




 


வாகனங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா, வாகனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஜி.பி.எஸ் கருவிகள், தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி கதவுகள் சரியாக செயல்படுகிறதா, முதலுதவி பெட்டி உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், பள்ளி வாகனங்கள் இயக்கும் ஓட்டுனர்கள் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் எனவும் விதிகளை பின்பற்ற வலியுறுத்தினர்.


 


 




 


இந்த ஆய்வு பணியின் இடையே பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்பு துறையினரின் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் வாகனத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் சாலையை கடந்து பெற்றோரிடம் மாணவர்கள் செல்லும் வரையில் அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் எனவும், அவசர கதியில் பேருந்துகளை எடுப்பதால் தான் விபத்துகள் ஏற்படுவதாக எஸ்.பி பிரபாகர் தெரிவித்தார். மேலும் ஆய்வு பணியின் போது ஓட்டுநர் வருகை இல்லாத பேருந்து மற்றும் முதலுதவி பெட்டிகளை சரிவர பயன்பாட்டில் வைக்காத பேருந்துகளுக்கு அனுமதி தரக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.