கரூரில் ஓடிக் கொண்டிருந்த ஓலா எலக்ட்ரிக்கல் இரு சக்கர வாகனம் தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.


கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலையைப் பார்த்து வருகிறார். இவர் பேட்டரியால் இயங்கக் கூடிய ஓலா எலக்ட்ரிக்கல் இரு சக்கர வாகனத்தை 6 மாதங்களுக்கு முன்பு வாங்கி அலுவலகம் சென்று வந்துள்ளார்.




இன்று வழக்கம் போல் வீட்டிலிருந்து புறப்பட்டு சேலம் பை - பாஸ் சாலையில் திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் பேட்டரி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து புகை வந்துள்ளது. 


 


 




இதனை பார்த்த தினேஷ் இரு சக்கர வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு இறங்கி விட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் ஓலா இரு சக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமானது. 


 





தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எரிந்த ஓலா இரு சக்கர வாகனத்தின் மதிப்பு 1,47,000 ரூபாய் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.


 




கரூர் முக்கிய சாலையில் ஏற்பட்ட திடீர் இருசக்கர வாகன தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதே நிலையில் மதுரையில் இன்று இருசக்கர வாகன திடீரென தீப்பற்றி எரிந்ததின தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டு இருசக்கர வாகனங்கள் சாலையில் சென்று இருந்த போது தீப்பற்றிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.