குளித்தலையில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதியரசர் டி.ராஜா திறந்து வைத்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதியரசர் டி.ராஜா திறந்து வைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் சட்டம், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர். சுரேஷ்குமார், கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி மற்றும் நீதியரசர் கே.குமரேஷ் பாபு, கரூர் மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தார்கள். கரூர் மாவட்ட தலைமை குற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
பின்னர் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதியரசர் பேசியதாவது,
கரூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும், வயதில் மூத்த வழக்கறிஞர்களை கௌரவப்படுத்தியது சந்தோஷம் அளிக்கிறது. நான் ஒன்றை உங்களிடம் கூறி கொள்ள விரும்புகிறேன். மூத்த வழக்கறிஞர் என்றால் தமிழ்நாட்டில் அட்வகேட் ஜெனரல், இந்தியாவில் அட்டரினி ஜனரல் என்பார்கள். இந்தக் குளித்தலையில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. 19 நீதிமன்றங்கள் கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே இருந்தது. இப்பொழுது திறக்கப்பட்ட இந்த கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்துடன் 20 நீதிமன்றங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. நான் பல மாவட்டங்களுக்கு சென்று நீதிமன்றங்களை பார்த்து வருகிறேன். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை சட்டத்திற்கு பயந்து வாழக்கூடிய மக்கள் இங்கு இருக்கிறார்கள். போக்சோ வழக்கு பல நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கிறது. கரூர் நீதிமன்றத்தை பொறுத்தவரை 19 போக்சோ வழக்குகள் மட்டும்தான் உள்ளது. நான் ஏற்கனவே கரூர் மாவட்டத்திற்கு பொறுப்பு நீதிபதியாக இருந்த போது 7 வழக்குகள் தான் இருந்தது. தற்போது உள்ள 19 வழக்குகளையும் விரைவாக மகிளா நீதிமன்றம் முடிக்க வேண்டும். அதன் மூலம் கரூர் மாவட்டம் தமிழகத்திலேயே மட்டுமல்லாமல் உலகத்திலேயே போக்சோ வழக்கு இல்லாத மாவட்டமாக இருக்கும். ஒரு வழக்கறிஞர் மற்றவருக்காக பேசக்கூடிய ஒரு பணியாளர் ஆவார். நீதிமன்றத்தில் பேசும்போது நியாயப்படி, தெளிவாக, உண்மையாக பேச வேண்டும் என்பதற்காக ஒரு வழக்காடி வருகிறார். இந்த நான்கு விஷயங்களையும் தெரிந்து தெளிவான வழக்காடுபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். அப்பொழுது தான் நீதிபதி தெளிவான தீர்ப்புகளை வழங்க முடியும். நீங்கள் பேசுவது ஒரு பொருளோடு ஒரு நியாயத்தோடு ஒரு உண்மையோடு வழக்காடினால் கண்டிப்பாக அதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். எதற்காக நான் இதை சொல்கிறேன் என்றால் ஒரு சில வழக்காடிகள் தெளிவு இல்லாமல் வழக்காடுகிறார்கள் அதனால் வழக்குகள் தாமதம் ஏற்படுகிறது . நீங்கள் எடுத்து நடத்தக்கூடிய வழக்குகள் அப்போதுதான் வெற்றி பெறும்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்று சொல்வார்கள் எந்த ஒரு மனிதனும் எடுத்தவுடன் வரைந்து விட முடியாது. எல்லாவற்றுக்கும் ஒரு பயிற்சி வேண்டும் அதை நாம் பழக வேண்டும். சாக்ரடீஸ் இளைஞர்களுக்குச் சொன்ன மிகப்பெரிய அறிவுரை என்னவென்றால் நீங்கள் எங்கு பேச போனாலும் என்ன பேச போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். என்ன சொல்ல வேண்டும் என்பதை விட அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்.
நீங்கள் வழக்காட வரும்போது விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு என்ன சொல்ல வேண்டும் அதை எப்படி சொல்ல வேண்டும் இனிமையான முறையில் சொல்லி உங்களுடைய வழக்குகளை வழக்காட வேண்டும் அப்போதுதான் நீதி அரசர்கள் புரிந்து கொண்டு நல்ல தீர்ப்பு வழங்க முடியும். எனவே வழக்காடிகள் நல்ல இனிமையான வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாமல் வழக்காட வேண்டும் எனத் தெரிவித்தார்.
சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்,
எந்த ஒரு இடத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக நிர்மாணிக்கப்படுகிறதோ அங்கே நீதிகள் மிகச் சிறப்பாக அமையும் என்பது இன்றைக்கு நாடறிந்து உண்மை. எனவே தான் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதிலே அதன் மூலமாக ஒரு மாநிலத்தை அமைதி பூங்காவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலே அக்கறை கொண்டிருக்கிற ஒரு முதலமைச்சராக நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார்கள் என்பதை இந்த நேரத்திலே நான் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். நீதித்துறைக்கு என்ற ஒரு தனி மரியாதை உண்டு அந்த நீதித்துறையின் உடைய கோரிக்கைகளின் நிறைவேற்றி தர வேண்டியது ஒரு அரசனுடைய தலையாய பணியாக அமைந்திருக்கிறது. ஒரு காலத்தில் பார்த்தோம் ஆனால் ஒரு நகராட்சி பகுதியிலோ அல்லது ஒரு மாநகராட்சி பகுதியில ஒன்று அல்லது இரண்டு நீதிமன்றங்கள் தான் இருக்கும். இன்றைய சூழ்நிலையில் வழக்குகள் எண்ணிக்கையில் அடிப்படையில் நீதிமன்றங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்த எண்ணிக்கை கேற்ப வழக்குகள் எல்லாம் தனித்தனியாக நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு தேவையான அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் அதிகமான நிதியை தந்தாலும் கூட இன்றைக்கு தேவைகள் இன்னும் அதிகமாய் கொண்டிருக்கிறது. அந்த தேவைக்கு ஏற்ப பல்வேறு வகையிலே ஒவ்வொன்றையும் சரி பார்த்து நீதிமன்றத்திற்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலைகளை இருக்கின்றது. நிச்சயமாக வருகிற நிதி நிலை அறிக்கை பல்வேறு நல்ல கோரிக்கைகளை நம்முடைய முதலமைச்சர் சட்டத்துறையின் மானிய கோரிக்கையின் போது நிறைவேற்றித் தருவதற்கான வாய்ப்புகளை தருவார்கள். இப்பொழுது நம்முடைய உயர்நீதிமன்றத்தினுடைய பல்வேறு கோரிக்கைகளை இன்றைக்கு கிடப்பில் உள்ளது. அதையெல்லாம் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும். அதனை விரைந்து நிறைவேற்றக்கூடிய நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள சொல்லி இருக்கிறார்கள். அதேபோல பொறுப்பு நீதியரசர் தெரியும் எனவே விரைந்து உங்கள் கோரிக்கைகளை எல்லாம் விரைவாக நிறைவேற்ற முடியுமோ நிறைவேற்றி தந்து நீதித்துறை தமிழ்நாட்டிலேயே மிகச் சிறப்பாக செயல்படுவதற்கு நிச்சயமாக அரசு உறுதுணையாக இருக்கும் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம், குளித்தலை வழக்கறிஞர் சங்க தலைவர் K.S.M.சாகுல் அமீது, செயலாளர் நாகராஜன், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.