கரூர் அருகே சாலையோர குப்பையில் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக தீயிட்டு எரிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காகித குப்பைகளுடன், நாப்கின்கள் எரிந்து கிடந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் செல்லாண்டிபட்டி அருகே உள்ள அம்மன் நகர் பகுதி அருகே சாலையோர குப்பையில் ரூபாய் நோட்டுகள் கட்டப் பயன்படும் தனியார் வங்கியின் (KVP) பேண்டுகள் சிதறி கிடந்துள்ளன. அதன் அருகிலேயே ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக குவியலாக தீயிட்டு எரிக்கப்பட்டதாக மர்ம நபர் ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.
ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வெள்ளியணை காவல் நிலைய போலீசார் அந்த இடத்தை சோதனை செய்து பார்த்ததில் காகித குப்பைகளுடன் சேர்த்து பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்பட்ட நாப்கின்களும் தீயிட்டு எரிக்கப்பட்டதாகவும், ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், வங்கியில் பணத்தை டெபாசிட் செய்து விட்டு ரூபாய் நோட்டுகளை கட்ட பயன்படுத்தும் பேண்டுகள் எந்தவித சேதாரமும் ஏற்படாமல் இருக்கும் போது, பணத்தை மட்டும் எப்படி கொளுத்தியிருக்க முடியும் என்றும், பேண்டுகளை யாரேனும் சாலையோரம் வீசிவிட்டு சென்றிருக்கலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.