கேரள மாநிலம் திருச்சூரில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் பிரவின் ஆகியோரை அங்கிருந்து அழைத்து வரப்பட்டு கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனைக்கு பிறகு கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 ல் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பரத் குமார் 15 நாட்கள் (31.07.2024) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.


 


 




இதையடுத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். பிரவின் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கரூரில், ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 35 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பிரவின், சித்தார்த், ரகு, யுவராஜ் உட்பட 7 பேர்கள் மீது மோசடி, கூட்டுச்சதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


 




அதே போல, நில உரிமையாளர் பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உட்பட 13 பேர்கள் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதையடுத்து கடந்த 15ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தலைமறைவாக இருந்த விஜயபாஸ்கரை 7 தனிப்படை அமைத்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


 


 




இந்த நிலையில் நேற்று காலை கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு 5க்கும் மேற்பட்ட கார் மற்றும் வேனில் 10க்கும் மேற்பட்ட போலீசார் மதியம் 2.00 மணிக்கு அழைத்து வந்தனர். கரூர், திருச்சி மற்றும் சென்னையை சேர்ந்த சிபிசிஐடி போலீசார் இருவரிடம் துருவி, துருவி கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருச்சி சரக சிபிசிஐடி டிஎஸ்பி சதிஸ்குமார் முன்னாள் அமைச்சரிடம் விசாரணை மேற்கொண்டார். பிரகாஷ்க்கும், விஜயபாஸ்கருக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது?  22 ஏக்கர் நிலம் யாருடையது? அவசர அவசரமாக 22 ஏக்கர் நிலத்தை பிரகாஷிடம் எழுதி வாங்க காரணம் என்ன? Non Trasable Certificate எப்படி வாங்கப்பட்டது ? பின்னணியில் இருந்தவர்கள் யார்? 35 நாட்களாக தலைமறைவாக இருக்க உடந்தையாக உதவியது யார்? என விசாரணையில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.


 




 


எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பிரவின் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவமனையில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பலத்த கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பரிசோதனை முடிந்து வெளியே வந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களை பார்த்து இந்த வழக்கு பொய் வழக்கு, அரசியல் பழி வாங்கும் வழக்கு இதை நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்போம் எனக் கூறி சென்றார்


 




இதனைத் தொடர்ந்து, ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திர பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பிரவின் ஆகிய இருவரையும் 15 நாள்  (31.07.2024) நீதிமன்ற காவலில் வைக்க கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 நீதிபதி பரத்குமார் உத்திரவிட்டுள்ளார்.