தமிழகத்தில் எழை, எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களை மலிவான விலையில் தரமாக வழங்க வேண்டும். ஆகையால் தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு உணவுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறது.


குறிப்பாக தமிழகத்தில் சுமார் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் இருக்கிறார்கள். இதில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சமையல் எண்ணெயை (பாமாயில்) மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள்.


குறிப்பாக தமிழகத்தில் சிறப்பு வினியோகத் திட்ட பொருட்களாக பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு தமிழக அரசு வினியோகித்து வருகிறது.


கடந்த 2007-ம் ஆண்டு முதல் ரேஷன் கடைகளில் பருப்பு ஒரு கிலோ ரூ.30-க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.


இதற்காக கடந்த 2007-ம் ஆண்டு அரசு ஒரு கிலோ பருப்பை 50 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் வாங்கி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.30-க்கு வழங்கியது. அது போல, பாமாயிலை ரூ.45-க்கு வாங்கி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.25-க்கு வழங்கியது.




ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை உயர்வா?


ஆனால் வெளிச்சந்தையில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு , அதாவது 2014-15-ம் ஆண்டு தமிழக அரசு பருப்பு, பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ரூ.1,800 கோடி மானியம் கொடுத்தது. தற்போது இந்த மானியத்தொகை ரூ.3,800 கோடியாக உயர்ந்துள்ளது.


மேலும், பருப்பு வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.155 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று, ஒரு லிட்டர் பாமாயில் ரூ.95 வரை அதிகரித்து உள்ளது. தமிழக அரசு இந்த விலைக்கு கொள்முதல் செய்தாலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு கிலோ ரூ.30-க்கும், பாமாயில் ரூ.25-க்கும் மட்டுமே வினியோகிக்கப்பட்டு வருகிறது.


ஆகையால், ரேஷனில் வழங்கும் பருப்பு, பாமாயில் விலையை அதிகரிக்கலாமா என்று ஆலோசனை செய்யபடுவதாகவும், ஆனால் இதுவரை இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிக்கபடாமல் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. ஆகையால் பொருட்களின் விலை ஏற்றுவது குறித்து தொடர்ந்து ஆலோசனை செய்யபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.