கரூர் வெண்ணமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் நிலங்கள் அளவீடு செய்யும் பணியின் போது, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை குண்டு கட்டாக தூக்கி போலீசார் காவல்துறை வாகனத்தில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் பாலசுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் கோவில் அருகில் அமைந்துள்ள நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்ற போது, அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்யும் பணியில் அறநிலையத்துறை வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்புடன் ஈடுபட்டனர். அப்போது வெண்ணைமலை பேருந்து நிறுத்தம் அருகே நிலத்தை அளவீடு செய்யும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் செந்தில் என்ற நபர் அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, போலீசார் அவரை குண்டு கட்டாக தூக்கி காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபர் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, மது போதையில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தனர். பரபரப்பான அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.