கரூர் மாநகராட்சி ஆணையர் சுதாவை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் பல்வேறு துறை சார்ந்த பணிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் அலுவலக ஊழியர்களை வரிவசூல் பணிகளுக்கு முன்னாள் ஆணையர் ஈடுபடுத்தி வந்துள்ளார். அண்மையில் கரூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற சுதா வரி வசூல் பணிகளிலேயே ஈடுபடுத்தி வருவதாகவும், பணி நேரத்தில் ஊழியர்களை ஒருமையில் பேசுவதோடு, தரக்குறைவாக நடத்துவதாகவும், இலக்கு வைத்து வரி வசூலை தீவிரப்படுத்த கட்டாயப்படுத்துவதால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்யும் முடிவுக்கு பல ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அலுலக உதவியாளர் ராஜசேகரி என்பவரை ஆணையர் சுதா நேற்று மாலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். எனவே, தங்களுக்கும் இது போல் நடக்க வாய்ப்புள்ளதாக, பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலக வாயில் முன்பு ஊழியர்கள் சுமார் 30 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாநகராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்ததாக ஆணையர் சுதா செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்.
கரூர் மாநகராட்சியில் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாக ஆணையர் சுதாவை கண்டித்து நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து ஒரு சில மணி நேரத்தில் கைவிட்டனர். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையளர் சுதா செய்தியாளர்களை சந்தித்தார். கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்கு இதுவரை 28.67 கோடி ரூபாய் வரி வசூல் நிலுவையில் உள்ளது. நடப்பு ஆண்டு நிலுவை தொகை 19.62 கோடி நிலுவையில் உள்ளது. இதனை வசூல் செய்வதற்காக அலுவலர்களை தீவிரபடுத்தி உள்ளோம்.
வரி வசூலில் ஈடுபடுபவர்கள் காலை 8 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என்பது விதி. ஆனால், இவர்கள் காலை 10 மணிக்கு தான் பணிக்கு வருகிறார்கள். மாலை வரை அந்தந்த பகுதியில் சுற்றி விட்டு 4 அல்லது 5 பில்களை மட்டுமே வசூலித்து வருகிறார்கள். சம்பளம் உரிய காலத்தில் முறையாக வழங்கப்பட்டு தான் வருகிறது. நான் யாரையும் ஒருமையில் பேசுவதில்லை. அனைவரும் ஒரு குடும்பம் போல்தான் வேலை பார்த்து வருகிறோம். தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் அலுவலர் தவறான தகவல்களை நிர்வாகத்திற்கு கொடுத்ததால் தான் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளனர் என்றார்.