Premalatha Vijayakanth: நாடாளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகளை எந்த கட்சி ஒதுக்குகிறதோ அந்த கட்சியுடன் தான் கூட்டணி என்று திட்டவட்டமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

 

சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினார். அப்போது, “இன்று மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக கட்சியின் வளர்ச்சி குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, பல மாவட்ட செயலாளர்கள் தனித்து தேர்தலில் போட்டியிடலாம் என்று கருத்து தெரிவித்தனர். கேப்டன் விஜயகாந்தை வைத்து பரிதாப வாக்குகளை வாங்குவோம் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம். 

 

கேப்டன் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல். கேப்டனின் வழிகாட்டுதலின் படி, யார் அதிகமாக எங்களுக்கு தொகுதி கொடுக்கிறார்களோ அவர்களுக்குடன் தான் எங்களின் கூட்டணி இருக்கும். அதிமுக அல்லது பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு ராஜ்ஜிய சபா மற்றும் லோக் சபாவுக்கு அதிக இடங்களை ஒதுக்குகிறார்களோ அவர்களுடன் களம் காண தயாராக உள்ளோம். 2014ம் ஆண்டு நடைபெற்றது போல் 14 மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் யார் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம். 

 

தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாகவோ மறைமுகமாகவோ யாரிடமும் நாங்கள் பேசவில்லை. இனிமேல் தான் தேர்தல் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும். வரும் 12ம் தேதி தேமுதிகவின் மண்டல பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக எங்களின் நிலைபாடு குறித்து உறுதியாக முடிவெடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்றார். 

 

மேலும், தொடர்ந்து பிரதான கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருவதாகவும், தேமுதிக கடைசியாக முடிவுகளை அறிவிக்கவில்லை என்றும், மாவட்ட செயலாளர்கள் விருப்பப்படி நல்ல முடிவை தான் கட்சி தலைமை எடுக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தேமுதிக லஞ்சம், ஊழல் இல்லாத கட்சி என்றதுடன், விஜயகாந்த் பற்றி தவறான செய்திகள் வெளியிட்டு, அவரை இல்லாமல் செய்து விட்டதாகவும் கடிந்து கொண்டார். 

 

இறுதியாக நாடாளுமன்ற தேர்தல் மட்டுமில்லாமல் 2025ம் ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து கட்சியின் பயணம் இருக்கும் என்றார். நாடாளுமன்ற தேர்தலில் விஜயபிரபாகரன், தான், சுதீஷ் உள்ளிட்டோர் போட்டியிட வேண்டும் என்று கட்சியின் மாவட்ட செயலாளர்கள் விரும்புவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார். 

 

நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், அவருக்கு வாழ்த்துகள் என்றார். முன்னதாக “கேப்டன் எப்பொழுதும் சொல்வார். எனக்குன்னு ஒரு இடம் இருக்கு என்று பேசுவாரு. அது கடைசியில் தலைமை கழகத்தில் இருக்கும் இடம் என்று எங்களுக்கு தெரியாமல் இருந்தது. கடைசியாக அந்த இடத்தில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டு எல்லாரும் தரிசிக்கும் கோயிலாக மாறியுள்ளது” என பேசியதுடன் கண்ணீர் சிந்தினார்.