தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.
அதிமுக-பாஜக இடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக கடந்த ஞாயிற்றுகிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறினார். எனினும் இரு கட்சிகள் இடையே இடங்கள் பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், பாஜக-அதிமுக இடையே கூட்டணி முறிவு என்று தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பாஜக தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நேற்று அதிமுக தன்னுடைய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன்படி கடலூர், தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வேட்பாளரை பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதில் கடலூர் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அத்துடன் கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் மற்றும் தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கான நகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது.
தமிழ்நாட்டில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: மாணவி தற்கொலை விவகாரம்: சிபிசிஐடி விசாரணை கேட்ட மாணவியின் தந்தை - சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி!