மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு, 57 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. மாயனூர் கதவணைக்கு ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 977 கன அடி தண்ணீர் வந்தது. தற்போது 57 ஆயிரத்து, 713 கன அடியாக தண்ணீர் வரத்து சரிந்தது. டெல்டா பாசன வசதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 56 ஆயிரத்து, 493 கன அடி தண்ணீரும் நான்கு வாய்க்காலில் 1,220 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, வினாடிக்கு 1,909 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அமராவதி ஆற்றில் வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. ஆனால், ஆற்றுப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக, கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 6,370 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம் 15 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 87.70 அடியாக இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால், தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 33.46 கன அடியாக இருந்தது. கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 26.17 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட மக்களை குளிர்வித்த மழை
கரூரில் கீழடுக்கு சுழற்சி காரணமாக, இரண்டாம் நாளான காலை முதல் இரவு வரை மாவட்டம் முழுவதும் லேசான அளவில் சாரல் மழை பெய்து கரூரை குளிர்வித்துள்ளது. தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில் கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூரில் 1 தேதி மதியத்துக்கு மேல் பரவலாக கரூர் மாவட்டம் முழுதும், சாரல் மழை பெய்து, அதன்படி, 36.10 மிமீ மழை பதிவாகி இருந்தது.
இதன் தொடர்ச்சியாக காலை முதலே மாவட்டம் முழுதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, விட்டுவிட்டு லேசான அளவில் சாரல் மலையும் பெய்து கரூரை குளிர்வித்துள்ளது. அதன்படி, கரூர் 2.4 மி.மீ, அரவக்குறிச்சி 3 மி.மீ, அணைப்பாளையம் 2.2 மி.மீ, குளித்தலை 38 மி.மீ , தோகைமலை 1 மி.மீ, கிருஷ்ணாயபுரம் 13 மி.மீ, பஞ்சம்பட்டி 2.4 மி.மீ, கடவூர் 4 மி.மீ என மாவட்டம் முழுதும் 66 மி மீ, மழை பெய்திருந்தது.
இதன் மொத்த சராசரி 5.50 மி.மீட்டராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பம் குறைந்த இதமான நிலை நிலவின் வருவதால் மாவட்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.