கரூர் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் மணி நகரில் மீட்கப்பட்ட பொதுப் பாதையில் சாலை அமைத்து தரக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 




கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 5வது வார்டு மணி நகருக்கு சொல்லும் பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்திருந்தார். அப்பகுதி பொதுமக்களின் 30 ஆண்டுகள் கோரிக்கையாக இருந்த ஆக்கிரமிப்பினை கடந்த ஆண்டு குளித்தலை கோட்டாட்சியர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மீண்டும் பாதை அமைக்க பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது.


 


 




 


ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பாதையில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம் சாலை அமைத்து தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனிநபர் மீண்டும் அந்தப் பாதையினை ஆக்கிரமிக்க முயன்று வருவதாகவும், மழைகாலத்தில் மண்சாலை சேதமடைந்து சென்று வர சிரமமாக உள்ளதாகவும், எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக சாலை அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 




மணி நகரில் இருந்து கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகம் வரை கண்டன கோஷங்களை முழக்கமிட்டவாறு பாத்திரங்களை எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். மேலும் தனி நபர் ஆக்கிரமிப்பிற்கு பேரூராட்சி நிர்வாகம் துணை போவதாக கூறி பேரூராட்சி நிர்வாகத்தினை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர். ஊர்வலமாக வந்த அப்பகுதி பொதுமக்களை போலீசார் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பாக மறித்தனர். பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து கண்டன கோஷம் முழக்கமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட பொதுமக்களை  போலீசார் கைது செய்து மாயனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.