கனடாவில் வேலை வாங்கி தருவதாக உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்து பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்ய கோரி கரூர் எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் அகிலா. இவரது கணவர் கோபி சங்கர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி பேஸ்புக் சமூக வலைதளத்தில் JOB in சிங்கப்பூர் என்ற விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.
அதில் கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி சேர்ந்த பஜீல் ரகுமான் என்பவர் தங்களது ஏஜென்சி மூலமாக சிங்கப்பூர் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பல நபர்களுக்கு வேலை வாங்கி தந்துள்ளதாகவும், நேரில் வந்து விவரங்களை தெரிந்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். பஜீல் ரஹ்மான் மற்றும் அவரது மாமியார் சம்சாத் பேகம் ஆகியோர் கனடாவில் ஒரு லட்சம் சம்பளத்திற்கு வேலை இருப்பதாகவும், வேலையில் சேர்வதற்கு முன்பாக ரூபாய் 12 லட்சம் செலவுத்தொகை ஆகும் என்று ஆசை வார்த்தை கூறி, பணத்தை வாங்கிக்கொண்டு போலியான ஒர்க்கிங் பர்மிட் விசா ஆகிய ஆவணங்களை கொடுத்து ஏமாற்றி விட்டனர். கொடுத்த பணத்தை பலமுறை திருப்பி கேட்டும் தர மறுக்கின்றனர். மேலும், கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
எனவே, போலியான ஆவணங்களை தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்ததாக தெரிவித்தனர். இதேபோல் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு பேர் கரூர் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்