கரூர்: குளித்தலை அருகே ராக்கம்பட்டியில் கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூடலூர் ஊராட்சி ராக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் கமலராஜா (வயது 15). இவர் காராம்பட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவரது தாய், தந்தை கேரளாவில் வேலை செய்து வரும் நிலையில், ராக்கம்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டில் இரண்டு சகோதரர்களுடன் கமலராஜா தங்கி வந்துள்ளார்
இந்நிலையில், கமலராஜா கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, பந்து தவறுதலாக கிணற்றில் விழுந்து விட்டது. இதனை எடுக்க சிறுவன் முயன்ற போது கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தான். விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தேடிய உறவினர்கள் கிணற்றின் அருகே அவரது செருப்பு இருப்பதை கண்டு சந்தேகத்தின் பேரில் முசிறி தீயணைப்புத் துறையினர் மற்றும் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த முசிறி தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவனின் உடலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனர்.
அவரது உடலை கைப்பற்றிய தோகைமலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்