கரூரில் கலெக்டர் அலுவலகத்தில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை முயற்சி


கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மனு அளிக்க வந்த தான்தோன்றிமலை குமரன் சாலையில் வசிக்கும் பழனிச்சாமி, அவரது மனைவி சிலம்பாயி ஆகியோர் கயிற்றால் தங்கள் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். உடன் அருகில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அதனை தடுத்து, அவர்களை கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பழனிச்சாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மனைவி சிலம்பாயி (வயது 59). உடல்நல குறைவின்றி இருப்பதால் 10 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வருகிறோம். இப்போது எனக்கும் வயதாகி விட்டதால், என் மனைவியை காப்பாற்ற மிகவும் அவதிப்படுகிறேன். நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். அந்த வாடகையை கூட எங்களால் கொடுக்க முடியவில்லை. எங்கள் மகனால் எங்களுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை. எங்களை எனது மகன் கோர்ட், கேஸ் என்று அலைய வைத்து மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டார். எங்களது வீட்டு பத்திரம் மற்றும் காட்டு பத்திரத்தை பிடுங்கி வைத்துக் கொண்டு, எங்களை வீட்டை விட்டு வெளியேற்றியதால், இதுவரை மிகவும் சிரமத்தில் வாழ்ந்து வருகிறோம்.





 


தங்களிடம் பலமுறை புகார் அளித்தும், தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் நாங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டோம். எங்கள் காட்டை விற்றாவது ஜீவனம் செய்து கொள்ளலாம் என்று சங்கர் என்பவருக்கு விலைபேசிய நிலையில், காட்டு பத்திரத்தை என் மகன் இல்லை என்று சொன்னதால் அதுவும் நின்றுவிட்டது. எனது மகன் பத்திரத்தை வைத்துக் கொண்டு என்னிடம் பத்திரம் இல்லை என்கிறான். ஆகையால், நாங்கள் வாழ்வதற்கு எந்தவித வழியும் இல்லை. எங்களால் எந்தவித வேலையும் செய்ய முடியாததால், நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. அதனால்தான் கலெக்டர் அலுவலக வாயிலில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள துணிந்தோம். தாங்கள் எங்கள் மனு மீது தக்க நடவடிக்கை எடுத்து, எங்கள் பத்திரங்களை மீட்டு தர வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறியதன் பேரில் வயதான தம்பதியர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.




 


ஐஸ்கிரீம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு


கரூர் அருகே ஐஸ்கிரீம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் இருந்து பல்வேறு ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கும் சப்ளை செய்யும் வகையில், சரக்கு வாகனத்தில் ஐஸ்கிரீம் ஏற்றிக்கொண்டு, ஒரு சரக்கு வாகனம் கரூர் வந்தது. கரூர் மனோகரா கார்னர் வழியே சென்றபோது, மின்னழுத்தம் காரணமாக வாகனம் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் காரணமாக கரூர் மனோகரா கார்னர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தொழிலாளிக்கு கொலை மிரட்டல் நாலு பேரு மீது வழக்கு.


லாலாபேட்டை அருகே உள்ள கே.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 48). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோகுல் என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ராஜா மீது மோதுவது போல் வந்துள்ளார். இதனால், ராஜாவிற்கும் கோகுலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அடுத்து கோகுல் தனது நண்பர்களான அழகேசன், ஹரி, கவின் ஆகியோருடன் சேர்ந்து ராஜாவை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில், கோகுல் உட்பட 4 பேர் மீது லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.