இரண்டு அரசு பேருந்துகள் மோதல்


திருச்சியில் இருந்து குளித்தலை வழியாக கரூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதுபோல ஈரோட்டில் இருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்து ஒன்று குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தது. திருச்சி - கரூர் மாநில நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே உள்ள எல்லாரசு பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த இரண்டு அரசு பேருந்துகளும், முன் பக்கவாட்டுகளில் மோதி விபத்துக்குள்ளாகி, சாலையோர பள்ளத்தில் இறங்கி விட்டது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைந்து சேதமானது. ஆனால், இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் எந்தவித காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்துகள் விபத்துக்குள்ளானதால், அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வேறு பேருந்துகளில் ஏற்றி விடப்பட்டனர். பயணிகள் சிலர் நடந்தே குளித்தலை பகுதிக்கு சென்றனர். இந்த விபத்து காரணமாக வாகனங்கள் அனைத்தும் புறவழி தேசிய நெடுஞ்சாலை வழியாக மாற்றிவிடப்பட்டது. இந்த விபத்தால் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 




 


 


அரசு பேருந்து மோதி மூதாட்டி பலி.


கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள காருடையம் பாளையத்தைச் சேர்ந்த மலையப்பன் மனைவி மருதாயி (வயது 70). இவர் அதிகாலை காருடையம் பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து திருப்பூரை நோக்கி வந்த அரசு பேருந்து, முன்பு சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திக்கொண்டு சென்றபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மருதாயி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மருதாயியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை அடுத்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசு பேருந்து ஓட்டி வந்த கரூர் மாவட்டம், கரூர் அருகே உள்ள கீழக்கார கோட்டையை சேர்ந்த டிரைவர் சண்முகசுந்தரம் (வயது44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 




 


விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்.


கரூர் மாவட்டம், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக, சாலையின் இருபுறமும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களின் காரணமாக இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.


கூடுதல் விலைக்கு மது விற்ற மூணு பேரு மீது வழக்கு 28 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல்.


கரூர் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணி வரை கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும், அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.ர் அந்த வகையில் வேலாயுதம்பாளையம், வெள்ளியணை, அரவக்குறிச்சி போன்ற பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விற்பனை செய்யும் முயன்றதாக மூன்று பேர்கள் மீது வழக்குப்பதிந்து, அவர்களிடம் இருந்து 28 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.