கரூர் மாவட்டத்தில் ஒரு நாள் வாழ்க்கை திறன் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்து மாணவ, மாணவியருக்கு கருத்துரை வழங்கினார்கள்.
கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் ஒரு நாள் வாழ்க்கை திறன் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து மாணவ மாணவியருக்கு கருத்துரை வழங்கினார். பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “கல்லூரி மாணவ, மாணவிகளாகிய நீங்கள் இளமை காலங்களில் சந்தோசம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி பயணியுங்கள் கண்டிப்பாக வெற்றியின் நிலையை அடையலாம். கண்டிப்பாக தனி மனிதனின் ஒழுக்கம் அவசியம். வாழ்க்கையில் உங்களின் திறமைகளை என்னவென்று ஆராய்ந்து அதில் நீங்கள் சாதிக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற பல்வேறு நிலைகள் உள்ளன.
முதல் படி ஒருவர் தன்னுடைய பலம், பலவீனம் என்பதை ஆராயுங்கள், 2 வது படி உங்களுக்குன்னு ஒரு குறிக்கோளை தேர்வு செய்து நிறை குறைகளை ஆராயுங்கள், மூன்றாவது படி அறிவு தேடல் , அறிவு தேடல் என்பது நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களில் தகுந்தவாறு அறிவு தேடலை மேற்கொள்ள வேண்டும், 4 வது படி என்னென்ன வாய்ப்புகள் இருக்குதோ அந்த வாய்ப்புகளை நமக்குள் நிலைப்படுத்தி அதில் எவ்வாறு முன்னேற வேண்டும் என முயற்சி மேற்கொள்ள வேண்டும். 5வது படி கிடைத்த வாய்ப்புகளை உங்களின் தொழில்நுட்ப வசதியுடன் சாதிக்க வேண்டும், 6வது படி நீங்கள் பெற்ற வெற்றியின் மூலம் அடுத்த இளம் தலைமுறையினரை தொழில் முனைவோருக்கு ஆக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மேலை நாடுகளில் உயர் கல்வித் தொடர வேண்டுமானால் பெரும் தொகை செலவு நேரிடும். ஆனால் நமது மாநிலத்தில் இலவசமாகவே உயர்க் கல்வி வழங்கி வருகிறது.
நமது மாநிலத்தில் அதிக அளவில் குறு சிறு நிறுவனங்கள் மூலம் அதிக அளவு தொழில்கள் செய்ய தொழில் நிறுவனங்கள் மூலம் வாய்ப்புகள் அதிகம் வழங்கி வருகிறது. ஆகவே மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்த பாடங்களை தேர்வு செய்து அதற்கான தொழில் நுட்பங்களை புரிந்து கொண்டு அதற்கான பொருட்களை தயாரித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பயிற்சிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். நிக்கில் அறக்கட்டளை சார்பாக வழங்கப்படுகின்ற இந்த ஒரு நாள் வாழ்க்கை திறன் பயிற்சி உங்களின் மனநிலை மாறும் என்று நம்புகிறேன். நீங்களும் ஒர் இஸ்ரோ விஞ்ஞானியாகவும், தொழில் முனைவராகவும் ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவின் தரத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தேன்மொழி, நிக்கில் அறக்கட்டளை தலைவர் நிக்கில் நாகலிங்கம் உறுப்பினர்கள் தயானந்தன், துரைகணேஷ், ஜான்சன், வினோத்குமார், வேல்முருகன், கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் மற்றும் பேராசிரியர் உதவி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.