மும்முனை மின்சாரம், கூட்டுறவு சங்கத்தில் கடனுதவி, பேரழிவு காலத்தில் கோரப்பட்ட பயிர் காப்பீடு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நங்கவரம் விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் மனு அளித்துள்ளனர். 




கரூர் மாவட்டம் நச்சலூர், நங்கவரம், உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள்  உள்ளன. கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த சாகுபடிக்கு பிரதமர் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் காப்பீடு செய்யப்பட்டிருந்தது. நெற் கதிர் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் தொடர் பெய்த கனமழையால் நெல் சாகுபடி தண்ணீரில் மூழ்கி நாசமானது. அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தித்து பயிருக்கு நிவாரணம் கேட்டு கோரிக்கை மனு வழங்கினர்.







பின்னர் ஒரு வார காலத்தில் அப்பகுதிக்கு நேரடியாக சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் மற்றும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர்கள் அளித்த அறிக்கைப்படி நிவாரணமாக ரூ 4 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் பாரதப் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 7 மாதங்களாக பயிர் காப்பீடு தொகை வழங்காமல் விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றனர். எனவே, விரைவில் பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.




 


இதுவரை விதை நெல் வழங்காததால் விவசாயம் தொடங்க முடியவில்லை என்றும் கூட்டுறவு சங்கத்தில் வழங்க வேண்டிய பயிர் கடனும் இதுவரை வழங்காததால் கட்டளை மேட்டுவாய்க்காலில் தண்ணீர் சென்றும் விவசாயம் செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும்,  இதுவரை விவசாய பயன்பாட்டிற்காக 24 மணி நேரம் வழங்கி வந்த மும்முனை மின்சாரம் தற்போது 12 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே, 24 மணி நேரம் மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்றனர்.




மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்ட அவர், கொரோனா காலத்தில் கூட்டமாக சேர்ந்து வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், முகக் கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்திய ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி 24 மணி நேரத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகள் திரும்பிச் சென்றனர்.