க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதியான அத்திப்பாளையம் புதூர் பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதாக தெரியவந்ததால் அப்பகுதியில் வன விலங்கை பிடிப்பதற்காக வன துறையுடன் சேர்ந்து மாவட்ட நிர்வாகம் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதி அத்திப்பாளையத்தில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்டதால் அந்த வனவிலங்கை பிடிப்பதற்காக கூண்டுகள் அமைத்து வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது,
கரூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம், அத்திப்பாளையம் புதூர் பகுதியில் நாச்சிமுத்து ஆட்டுப்பட்டியில் ஒரு ஆடு இறந்த நிலையிலும், ஒரு ஆடு கடிபட்டு காயமுற்ற நிலையிலும் இருந்தது. கண்டறியப்பட்டு அது குறித்த தகவல் கிடைத்தவுடன் வனத்துறை அலுவலர்களை அப்பகுதிக்கு உடன் அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் ஆடு கடிபட்ட இடம் மற்றும் அருகாமையில் பதிந்துள்ள வனவிலங்கின் கால் தடத்தை வைத்து ஆய்வு செய்தபோது அது சிறுத்தையாக இருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கடந்த வாரத்தில் அருகாமையில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்டு அதை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்ட கால் தடமும் தற்போது இங்கு எடுக்கப்பட்ட கால் தடமும் பெருமளவு ஒற்றுமையாக உள்ளதால் அந்த சிறுத்தை இடம் பெயர்ந்து இங்கு வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த சிறுத்தையை பிடிப்பதற்காக 4 கூண்டுகள், 3 வலைகள் மற்றும் வனத்துறையை சேர்ந்த அதிவிரைவு படையினர் கொடைக்கானலில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக இரவு நேரங்களிலும் நன்றாக பதிவாக கூடிய வகையில் 19 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
எனவே மாலைநேரங்களில் குழந்தைகள், பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் அவசியம் வருவதாக இருந்தால் இரண்டு மூன்று பேராக சேர்ந்து கையில் கம்பு மற்றும் கை விளக்குடன் வரவேண்டும். ஆட்டுப்பட்டிகளில் இரவு முழுவதும் விளக்குகளை எரிய விடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சுற்று வட்டார பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 24 மணி நேரமும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சிறுத்தையை பிடிப்பதற்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் சரவணன், ஓசூர் வன உயிரின கால்நடை மருத்துவர் பிரகாஷ், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, புகலூர் வட்டாட்சியர் திருமுருகன், மச்சி அத்திப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.