சர்வாதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வம்  தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டமானது ஓபிஎஸ் அணி அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.  இதில் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி உள்பட அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.


இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”தமிழ்நாட்டின் நலன்களுக்காக, தமிழக மக்களின் நலன்களுக்காக, தமிழ்நாட்டில் ஒரு பொற்கால ஆட்சியை உருவாக்கித் தரவேண்டும் என்பதற்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.  அதிமுகவை தோற்றுவித்தார். மறைவிற்குப் பிறகு தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை ஜெயலலிதா கட்டிக்காத்து வந்தார். அவரின் மறைவுக்குப் பின் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் எனவும், கழகத்தின் நிர்வாக முடிவுகளை மேற்கொள்வதற்காக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பொதுக் குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கழகத் தொண்டர்களால் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுகுறித்து, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, இந்தியத் தேர்தல் ஆணையமும் இதனை அங்கீகரித்துவிட்டது. 


ஆனால் அதிமுக சட்ட விதியை எந்த அளவுக்கு சிதைக்க முடியுமோ அந்த அளவுக்கு சிதைத்து, கடந்தாண்டு நடந்த பொதுக்குழுவில் சர்வாதிகாரதின் உச்சத்துக்கு சென்று ஒருங்கிணைப்பாளர், தலைமை கழக நிர்வாகிகளுக்கு தெரியாமல் பல்வேறு அராஜாகங்கள் அரங்கேறியது. 2026 வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உள்ளது. எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக சட்ட விதியை காப்பாற்ற நாம் இரண்டாவது தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளோம்" என தெரிவித்தார். 


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 


இந்த கூட்டத்தில் இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, “அதிமுக என்னும் மக்கள் இயக்கத்தை  சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போது மாவட்டந்தோறும் நியமனம் செய்யப்பட்டும் வரும் நிர்வாகிகளின் பணிகளை மேலும் துரிதப்படுத்தி, விரைவில் அனைத்து மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த விழா, கழகத்தின் பொன்விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவை நடத்த தீர்மானிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.