கரூரில் பெய்த கனமழை காரணமாக அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழை நீரில் அட்டை, பூச்சிகள் வெளியேறும் அச்சத்தால் மாணவ, மாணவிகளுக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டது. கரூரில் கடந்த மூன்று நாட்களாக பகல் நேரங்களில் லேசான சாரல் மழையும், இரவு நேரத்தில் கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணி மலை அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கனமழை காரணமாக மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. நேற்று, இன்றும் காலையும் இப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் வந்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றும் தேங்கியுள்ள மழை நீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை.
மேலும், தேங்கியுள்ள மழை நீரில் அட்டை மற்றும் பூச்சிகள், பாம்பு உள்ளிட்டவை வெளியேறும் என்ற அச்சம் காரணமாக நேற்று மதியத்திற்கு மேல் மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அதிக அளவு மழை நீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டதோடு, 3 மணிக்கு மேல் பள்ளி மாணவர்கள் அவசர அவசரமாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். . இந்தப் பள்ளியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல தேங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் அளவில் தாந்தோணிமலை பகுதியைச் சுற்றிலும் மழை பெய்த நிலையில் திடீரென பள்ளி நுழைவாயில் வழியாக அதிகளவு மழை நீர் பல்வேறு கழிவுநீருடன் சேர்ந்து உள்ளே செல்ல ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல முழங்கால் அளவுக்கு தண்ணீர் புக ஆரம்பித்தது. இதனால், பள்ளி வளாகத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மாநகராட்சி உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் பள்ளி வளாகத்திற்குள் சென்று பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து 3 மணி அளவில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து மாணவர்களும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு விடுமுறை என்பதால் தண்ணீர் புகாத வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பள்ளியை ஒட்டி மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் வாய்க்கால் வழியாக சென்று வந்ததாகவும், வாய்க்காலை ஒட்டி உள்ள பகுதியில் இடப் பிரச்சினை காரணமாக வாய்க்கால் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மழைநீர் வெளியேறி செல்ல முடியாமல் அருகில் உள்ள பள்ளி வளாகத்துக்குள் புகுந்து விட்டதாகவும், இந்த பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே, தொடர்ந்து டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை என்பதால் இது போன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாத வகையில் தேவையான சீரமைப்பு ஏற்பாடுகளையும், அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி நிர்வாகம் விரைவில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.