கரூரில் முருங்கை பூங்கா
விரைவில் முதல்வர் ஒப்புதலுடன் கரூரில் முருங்கை பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கரூரில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
கரூர் கோவை ரோடு, தனியார் அரங்கில் நடைபெறும் சர்வதேச முருங்கை கண்காட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், குறு சிறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்து, கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர்.
4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் விவசாய பெருமக்கள், தொழில் முனைவோர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியில் முருங்கை சார்ந்த விவசாய பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட முருங்கை பொடி வகைகள், திண்பண்டங்கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முருங்கை சார்ந்த விவசாய பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்யக்கூடிய நவீன இயந்திரங்கள், வேளாண் இடுபொருட்கள், வேளாண் கருவிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள், விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது, கரூர் மாவட்டத்தில் முருங்கை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முருங்கை பூங்கா அமைப்பதற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை வைத்திருந்த நிலையில், முதல்வர் கவனத்திற்கு அது எடுத்துச் செல்லப்பட்டு முதல்வரும் இசைவு தெரிவித்துள்ளார். முருங்கை பூங்கா அமைப்பதற்கான இடத்தை பெற்று தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். விரைவில் முதல்வர் ஒப்புதலுடன் கரூரில் முருங்கை பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழகத்தில் பருவ மழையால் இதுவரை பாதிப்புகள் ஏற்படவில்லை. வேளாண்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் அதிகாரிகளை வைத்து கணக்கெடுக்கும் பணியும், பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை கண்காணித்து முதல்வர் அனுமதியுடன் இழப்பீடு வழங்க தயார் நிலையில் இருக்கிறோம் என்று உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.