கரூர் பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாத மாநகராட்சிக்கு சொந்தமான வாடகைதாரர்களின் கடைகளை இழுத்து மூடி ஆணையர் சரவணக்குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Continues below advertisement

 

 

Continues below advertisement

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், ஜவகர் பஜார், காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான 350க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வாடகை உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட வாடகையை ஒரு சிலர் கட்டி வந்த நிலையில், பலர் வாடகை உயர்வுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றனர். இதனால் பல ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் லட்சக்கணக்கான ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது.

 

பலமுறை நிலுவைத் தொகையை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டும், வாடகைதாரர்கள் உள்வாடகைக்கு விட்டும், வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அதிரடியாக பேருந்து நிலையத்துக்கு வந்த மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் கடைக்காரர்களை தனித்தனியாக சந்தித்து வாடகை பாக்கி குறித்து கேட்டறிந்தும், அதிகமான வாடகை நிலுவைத் தொகை வைத்திருந்தவர்களின் கடைகளை ஷட்டர் போட்டு இழுத்து மூடினர். ஒரு மணி நேரத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் இழுத்து மூடப்பட்டது.

 

ஆணையரின் இந்த அதிரடி நடவக்கையால் கரூர் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. பேருந்து நிலைய வளாகத்தை சுற்றி செயல்பட்டு வரும் தள்ளுவண்டி பழக்கடைகளுக்கு 300 ரூபாய் என்ற வாடகையை நிர்ணயித்து, அந்த தொகையை செலுத்த முன்வரும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படும் என ஆணையர் சரவணக்குமார் தெரிவித்தார்.