CM Stalin: சென்னையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் சிலையை, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வி.பி. சிங் சிலை திறப்பு:
சமூகநீதி நாயகன் என போற்றப்படும் முன்னாள் பிரதமர் வி.பி,. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி, காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி. சிங்கிற்கு முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், வி.பி.சிங்கின் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜயா சிங், அபய்சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - ஸ்டாலின்:
வி.பி. சிங்கின் சிலையை திறந்து வைத்த பிறகு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதி வாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு முழுமையாக, முறையாக வழங்கப்பட வேண்டும். பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையினர் இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். இடஒதுக்கீட்டை முறையாக கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிகள் வேறுபடலாம். ஆனால், பிரச்னைகள் ஒன்றுதான். புறக்கணிப்பு, ஒதுக்குதல், அடிமைத்தனம், தீண்டாமையை முறிக்கும் மருந்து தான் சமூகநீதி. நாட்டில் உரிமைக்காக போராடும் நிலைமை தற்போதும் உள்ளது. கல்லூரி, நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு துறை நியமனங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் போராட வேண்டியுள்ளது ” என பேசியுள்ளார்.
”நாங்களும் வி.பி.சிங் குடும்பத்தினர் தான்”
அதோடு, ”காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதிக் கதவை திறந்து வைத்தவர் வி.பி.சிங். வி.பி.சிங்கிற்கு சிலை அமைத்தது எங்களது கடமை. சமூக நீதி காவலரின் சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி. வி.பி.சிங்கிற்கு தாய் வீடு உத்தரபிரதேசம் என்றால் தந்தை வீடு தமிழ்நாடு. நாங்களும் வி.பி.சிங் குடும்பத்தினர் தான்.
11 மாதங்களே பிரதமராக இருந்தாலும் வி.பி.சிங் செய்த சாதனைகள் மகத்தானவை. ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தியவர் அவர். காவிரி நடுவர் மன்றம் அமைத்து தந்தவர்.. தந்தை பெரியாருக்கு தனிப்பட்ட நன்றியை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தவர். பெரியாரின் பெயரை உச்சரிக்காமல் அவரது பேச்சு இருக்காது. வி.பி.சிங் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வி.பி.சிங் மறையலாம், அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் மறையாது. சமூக நீதி காவலர் வி.பி. சிங் சிலை திறப்பு நாளில் நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி, விளிம்புநிலை மக்களுக்கான உரிமைகளை, அரசியல் செயல் திட்டமாக மாற்ற உறுதியேற்போம்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.